ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக இந்தியாவைச் சேர்ந்த நீதிபதி தல்வீர் பண்டாரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நெதர்லாந்தின் திஹேக் நகரில் சர்வதேச நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இதில் நீதிபதியாக இருந்த ஜோர்டான் நாட்டின் அவ்ன் சவ்கத் அல் கசனே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து நீதிபதி பதவிக்கு காலியிடம் ஏற்பட்டது.

இதனால் இந்த காலியிடத்துக்கு இந்தியா சார்பில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி தல்வீர் பண்டாரி பெயர் பரிந்துரைக்கப்பட்டு இருந்தது. இதேபோல் பிலிப்பைன்ஸ் நாடும் புளோரின்டினோ பெலிசியானோவை பரிந்துரைத்தது.

இதைத் தொடர்ந்து சர்வதேச நீதிமன்ற நீதிபதிக்கான தேர்தல் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்றது. ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் மொத்தம் உள்ள 197 வாக்குகளில் 122. தல்வீர் பண்டாரிக்குக் கிடைத்தது. இதேபோல் பாதுகாப்பு சபையில் மொத்தம் உள்ள 15 வாக்குகளில் 13 தல்வீர் பண்டாரிக்குக் கிடைத்ததையடுத்து அவர் நீதிபதியாகத் தேர்வானார்.

இதற்கு முன் கடந்த 1988 முதல் 1990 வரை உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எஸ்.பதக், சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி உள்ளார். அவருக்கு முன்பு 1950களில் சர் பெனகல் ராவ் நீதிபதியாக பணியாற்றியுள்ளார்.