கடந்த சனிக்கிழமை (28.04.2012) இரவு ஜெனின் பிராந்தியத்தைச் சேர்ந்த கிராமங்களுக்குள் அத்துமீறி நுழைந்த இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை, அக் கிராமங்கள் மீது அதிரடித் தாக்குதல் நிகழ்த்தியுள்ளன.

ஞாயிற்றுக்கிழமை காலைவரை நீடித்த இத்தாக்குதல் நடவடிக்கைகளால் இப்பிரதேசமெங்கும் பெரும் பீதியும் பதற்றமும் நிலவின என உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர். ஸபூபா, ருமானி, யமூன் ஆகிய கிராமங்கள் இத்தகைய அடாவடித் தாக்குதலுக்கு இலக்கான சில பலஸ்தீன் கிராமங்களாகும்.

தமது கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்களையும் இளைஞர்களையும் குறிவைத்து இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவம் அன்றாடம் இத்தகைய தாக்குதல்களை மேற்கொண்டுவருவதாக ஸபூபா மக்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். இக்கிராமத்தை அடுத்து ஆக்கிரமிப்புப் படையின் ஸாலெம் இராணுவ முகாம் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஸபூபா கிராமத்தில் இருந்து 13 வயதுச் சிறுவன் முஹம்மத் அபூ லிப்தேயை அவனது பெற்றோர் முன்னிலையில் வைத்து இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினர் திடீரெனத் தூக்கிச் சென்றுள்ளனர். சிறுவனின் பெற்றோரின் அயராத முயற்சியினாலும் இடையறாத போராட்டத்தாலும், ஸாலெம் இராணுவ முகாமில் மணிக்கணக்கில் தடுத்துவைத்து பலவாறு இம்சித்த பின்னர் ஆக்கிரமிப்பு இராணுவம் சிறுவனை விடுவித்துள்ளது.