மசூதிகள், கோயில்களை நாசப்படுத்துவதை நாகரீக உலகம் நிச்சயம் ஏற்றுக் கொள்ளாது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.

இலங்கையில் தம்புள்ளை மசூதி சேதப்படுத்தப்பட்டதை தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்து வரும் சூழலில் அவர் வெளியிட்ட கேள்வி பதில் அறிக்கை :

கேள்வி:- இலங்கையில் மசூதி இடிப்புப் பிரச்சினை குறித்து நாளேடுகள் செய்தி வெளியிட்டுள்ளனவே?

கலைஞர்:- இலங்கையின் மாத்தளை மாவட்டத்தில், தம்புள்ளா என்ற இடத்தில் இருந்த மசூதி ஒன்றினை சில நாட்களுக்கு முன்பு, 2000க்கும் மேற்பட்ட புத்த பிட்சுகள் கடப்பாரை சம்மட்டிகள் கொண்டு இடித்துடைத்து நாசம் செய்திருக்கின்றனர் என்றும் மசூதியை அகற்றி அந்த இடத்தை புத்த புனித இடமாக இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது என்றும் செய்தி தெரிவிக்கின்றது, இந்த மத வெறியை, மதத்தின் பெயரால் நடந்த வன்முறையை இலங்கையிலேயே பலர் கண்டித்திருக்கின்றனர்.

இலங்கையில் நடைபெற்று வரும் ராஜபக்சே அரசு – சிங்கள இன ஆதிக்கத்தை நிறுவுவதிலும், சிங்கள மொழி ஒன்றையே முதன்மை இடத்தில் வைத்துக்கொண்டாடுவதிலும், இலங்கை முழுவதையும் பௌத்த மயமாக்குவதிலும் கண்ணும் கருத்துமாக இருந்து செயல்பட்டு வருகின்றது என்பதை அனைவரும் அறிவர்.

இந்த நோக்கத்தை ஈடேற்றிக் கொள்வதற்காகத்தான் தமிழர்கள் வாழும் பகுதிகளில் எல்லாம் தமிழர்களை விரட்டி அடித்து விட்டு சிங்களர்களை குடியேற்றுதல், மிச்சமிருக்கும் தமிழர் பகுதிகளை எந்நேரமும் இராணுவக் கண்காணிப்பில் வைத்திருத்தல், இந்துக் கோயில்களையும், கிறித்துவ தேவாலயங்களையும் நாசப்படுத்துதல் போன்ற இன – மதங்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன.

அவற்றின் தொடர்ச்சியாகவே தற்போது மசூதிகளின் மீதும் தாக்குதல் தொடுக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய தாக்குதல்கள் புத்தர் போதித்த அன்பு, அறம், அமைதி ஆகியவற்றுக்கு எதிரானவை. மசூதிகளாயினும், தேவாலயங்களாயினும், கோயில்களாயினும் அவற்றைத் தாக்கி நாசப்படுத்துவதை நாகரிக உலகம் நிச்சயம் ஏற்றுக்கொள்ளாது; மத சகிப்புத்தன்மை உடையோர் மனம் கசந்து கலங்கிடுவர். இலங்கையில் நடைபெறும் இத்தகைய நிகழ்ச்சிகள் கடும் கண்டனத்திற்குரியவை  என்றும் கருணாநிதி கூறினார்.

Advertisements