சென்னை : 2002ல் காஞ்சி சங்கர மடத்தை சார்ந்த ராதாகிருஷ்ணனை காஞ்சி சங்கராச்சியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கொலை செய்ய முயன்ற வழக்கின் விசாரணை நடந்து வருகிறது. 100 கிலோ தங்கத்துக்காகவே தன்னை ஜெயேந்திரர் கொலை செய்ய முயன்றதாக பரபரப்பு தகவலை நீதிமன்றத்தில் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

காஞ்சி சங்கரமடத்தின் பக்தரான ராதாகிருஷ்ணன் 2002ல் தன் மந்தைவெளி வீட்டில் தொலைக்காட்சி பார்த்து கொண்டிருந்த போது இருவர் வீட்டில் புகுந்து அவரை கொலை செய்ய முயன்றர். இது தொடர்பாக 2002ல் ஜெயேந்திரர் மீது 2004ல் தான் இவ்வழக்கு சூடு பிடித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இவ்வழக்கு விசாரணையில் ஆஜரான ராதாகிருஷ்ணன் 1988லிருந்தே தமக்கு மடத்துடன் நெருக்கம் உண்டு என்றும் 1993ல் காஞ்சி பெரியவரின் 100வது பிறந்த நாள் விழாவை கொண்டாட முன்னாள் ஜனாதிபதி வெங்கட்ராமன் தலைமையில் குழு அமைக்கப்பட்டதாக கூறினார். அக்குழுவின் கீழ் ஏசி முத்தையா தலைமையில் அமைக்கப்பட்ட துணை குழுவில் தான் உறுப்பினராக இருந்ததாகவும் ராதா கிருஷ்ணன் கூறினார்.

அக்குழுவின் சார்பில் நன்கொடையின் மூலம் 100 கிலோ தங்கம் வாங்கி கோவிலின் பாகங்களில் பூசுவது என்று முடிவெடுக்கப்பட்டதாக தெரிவித்த ராதா கிருஷ்ணன் 15 கிலோ தங்கம் மட்டுமே வசூலிக்கப்பட்ட பணத்தில் வாங்கப்பட்டதாகவும் மீதமுள்ள 85 கிலோவை இறக்குமதி செய்ய அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் அனுமதி அளித்ததாகவும் தெரிவித்தார்.

பெரிய சங்கராச்சாரியரின் கனகாபிகேஷம் முடிந்ததும் 100 கிலோ தங்கம் தன்னிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும் ஜெயேந்திரர் கோரியதை தான் கடுமையாக எதிர்த்ததால் தன்னை ஜெயேந்திரர் கொல்ல திட்டமிட்டதாக ராதாகிருஷ்ணன் கூறினார்.

பின்பு அக்குழுவை கலைத்து விட்டு தற்போது குற்றம் சாட்டப்பட்டுள்ள சுந்தரேச ஐயரின் தலைமையில் சொர்ண விமான டிரஸ்ட் ஒன்றை ஏற்படுத்தி அத்தங்கத்தை கைப்பற்றி தங்கமுலாம் பூசியதாகவும் கூறினார். ஆனால் முழு தங்கம் பயன்படுத்தப்பட வில்லை என்றும் பல இடங்களில் கருமையாகவும் பல இடங்களில் பித்தளையால் பூசப்பட்டதை போலவும் காட்சியளிப்பதாகவும் ராதாகிருஷ்ணன் கூறினார். தங்க முலாம் பூசியதில் உள்ள குறைபாடுகளை முதல்வர் ஜெயலலிதா தலையிட்டு தீர்க்க வேண்டும் என்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார்

thanks : inneram.com

Advertisements