இந்திய ஆட்சிப்பணி (IAS), இந்தியக் காவல் பணி (IPS)  இவையடங்கிய, 2011-12 ஆம் ஆண்டுக்கான யு.பி.எஸ்.சி. தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை பிற்பகலில் வெளியிடப்பட்டன. நாடு முழுவதும் தேர்வு எழுதிய 2 லட்சத்து 40 ஆயிரம் பேரில் 910 மாணவ, மாணவியர் மட்டும் வெற்றி பெற்றனர்.

இவர்களுள் தமிழகத்திலிருந்து 68 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.ராமாநாதபுரத்தைச் சேர்ந்த விவசாய விஞ்ஞானியான எஸ்.கோபால் சுந்தரராஜ், அகில இந்திய அளவில் 5-வது இடத்தைப் பிடித்துள்ளார். போடி நாயக்கனூரைச் சேர்ந்த எம்.சுந்தரேஷ் பாபு 38-வது இடத்தையும், புதுக்கோட்டையைச் சேர்ந்த கே.செந்தில்ராஜ் 57-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

டெல்லியிலுள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (எய்ம்ஸ்) எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்ற டெல்லியின்  சேனா அகர்வால் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளார். மும்பையில் உள்ள டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சயின்ஸில் எம்.ஏ. பட்டம் பெற்ற ருக்மணி ரியார் 2-வது இடத்தையும், டெல்லி ஐ.ஐ.டி.யில் எம்.டெக். படித்த பிரின்ஸ் தவாண் என்ற மாணவர் 3-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.