இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை காஸா மீது மேற்கொண்டு வரும் இடையறாத வான்வெளித் தாக்குதலில் மற்றொரு பலஸ்தீன் சிறுவன் படுகொலை செய்யப்பட்டுள்ளான்.

கடந்த திங்கட்கிழமை முதல் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை காஸா மீது தொடர் வான்வெளித் தாக்குதல் நடாத்திவரும் நிலையில், சிறுவர்கள் உட்பட பலஸ்தீனர்கள் பலர் படுகொலை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இரண்டே வயதான ஹதீல் ஹத்தாத் எனும் பச்சிளம் பாலகி படுகொலை செய்யப்பட்டு, அவரது சகோதரன் மோசமான காயங்களோடு உயிருக்குப் போராடிக்கொண்டு இருக்கும் நிலையில், ஸைத்தூன் குடியிருப்புப் பகுதியில் நேற்று மீண்டும் இஸ்ரேலியப் போர்விமானங்கள் இரண்டு ஏவுகணைகளை எறிந்துள்ளன. இதன்போது 14 வயதான பள்ளிச் சிறுவன் மஃமூன் அல் ஆதம் படுகொலை செய்யப்பட்டுள்ளதோடு, அவனது தந்தையும், அயல்வீட்டவரும் படுகாயமடைந்துள்ளனர்.

சர்வதேச சட்டங்களுக்கு முற்றிலும் எதிரான முறையில் பலஸ்தீன் மக்களின் வாழ்வுரிமையை மறுத்து தொடர் அராஜகங்களை மேற்கொண்டுவரும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையின் அடாவடித்தனத்தைத் தடுத்து நிறுத்த பலஸ்தீன் மக்கள் விடுத்துவரும் தொடர்ச்சியான கோரிக்கைகள் சர்வதேச சமூகத்தினால் அலட்சியப்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இஸ்ரேலுக்கு எதிராக ஏவுகணைத் தாக்குதல் நடத்துவதற்கு பலஸ்தீன் விடுதலைப் போராளிகள் அமைப்பு தீர்மானித்துள்ளதாக உள்ளூர் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.