இந்திய மீனவர்கள் சென்ற படகு சரியான திசையில்தான் போயுள்ளது. அவர்கள் பக்கம் எந்தத் தவறும் இல்லை. அமெரிக்கக் கடற்படையினர்தான் தவறுதலாக சுட்டுள்ளனர் என்று துபாய் போலீஸ் துறை தலைவர் தெரிவித்துள்ளார்.

துபாய் அருகே தமிழக மீனவர்கள் அடங்கிய மீன் பிடி படகை எந்தவிதமான முன்னெச்சரிக்கையும் செய்யாமல் அமெரிக்கக் கடற்படையினர் சுட்டுள்ளனர். இதில் சேகர் என்ற மீனவர் கொல்லப்பட்டார். மூன்று மீனவர்கள் படுகாயமடைந்தனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மீனவர்களின் படகு தங்களை நோக்கி வேகமாக வந்ததாகவும், இதனால் முன்னெச்சரிக்கை செய்ததாகவும், அதையும் மீறி வந்ததால்தான் சுட்டதாகவும் அமெரிக்கக் கடற்படை விளக்கம் அளித்துள்ளது. ஆனால் அப்படி எதுவுமே நடக்கவில்லை என்று துபாய் போலீஸ் துறை தலைவர் லெப்டினென்ட் ஜெனரல் தஹி கல்பான் தமீம் விளக்கியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ஆரம்பகட்ட விசாரணையில், இந்திய மீனவர்கள் சென்ற படகு எந்த வகையிலும் யாருக்கும் அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் செல்லவில்லை என்று தெரிய வந்துள்ளது. மேலும் அவர்கள் சரியான திசையில்தான் போயுள்ளனர். அவர்கள் மீது அமெரிக்கக் கடற்படையினர் சுட்டதில்தான் தவறு இருப்பதாக தெரிய வந்துள்ளது என்றார்.

துபாய் போலீஸ் துறை தலைவரின் இந்த அறிக்கை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அமெரிக்கக் கடற்படையினர் பொய் சொல்லுவதை உறுதிப்படுத்தும் விதமாக இருக்கிறது. இதை சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டு தவறு செய்த அமெரிக்கக் கடற்படையினர் மீது சர்வதேச மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க இந்திய அரசு தீவிர முயற்சிகள் எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது

Advertisements