குஜராத் வன்முறைகளில் தமக்கு தொடர்பிருந்தால் தூக்கிலிடட்டும் என்று அம்மாநில முதல்வர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கும் கருத்து பொறுப்பற்றது என்று காங்கிரஸ் கட்சி கடுப்படித்திருக்கிறது.
நய் துனியா என்ற உருது வார ஏட்டுக்கு பேட்டியளித்துள்ள நரேந்திர மோடி, குஜராத் வன்முறையில் எனக்குத் தொடர்பிருப்பதாக நிரூபிக்கப்பட்டால் தூக்கிலிடுங்கள் என்று கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த மட்திய அமைச்சர் எம்.வீரப்ப மொய்லி, மோடியின் பேச்சு பொறுப்பற்றத்தனமானது.. யார் தவறு செய்கிறார்கள் என்பதை நீதிமன்றம்தான் தீர்ப்பளித்து தண்டனை விதிக்கும். மோடியின் இத்தகைய கருத்தானது சிறுபான்மையினரை சமாதானப்படுத்திவிடாது என்றார்.
இது குறித்து மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியதாவது:
நாட்டில் நீதிமன்றங்கள்தான் யார் தவறு செய்தவர்கள்? அவர்களுக்கு என்ன தண்டனை? என்பதை சொல்லும். இதெல்லாம் தெருவில் உட்கார்ந்து கொண்டு மோடி குற்றவாளியா? இல்லையா? என்று பேசிக் கொண்டிருக்க முடியாது.
தன்னோட இமேஜை மாற்றிக் கொள்ள வேண்டுமானால் முதலில் மோடி அவரது நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ள முயற்சிக்க வேண்டும். நீதிமன்றங்கள் மீது நம்பிக்கை வைத்து அனைவரும் செயல்பட வேண்டும் என்றார் அவர்.