ஊழலுக்கு எதிராக சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே குழுவினர் டெல்லியில் நடத்தி வரும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தின் 2-வது நாளில் கூட்டம் கணிசமாகக் குறைந்துவிட்டது.

மத்திய அமைச்சர்கள் 15 பேருக்கு எதிரான ஊழல் புகார்கள் குறித்து சிறப்பு விசாரணை நடத்த வேண்டும், எம்.பிக்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அன்னா ஹசாரே குழுவினர் நேற்று முதல் காலவரையற்ற போராட்டத்தை டெல்லியில் நடத்தி வருகின்றனர்.

முதல் நாள் போராட்டத்தின் போது அதிகபட்சமாக 2,500 பேரிலிருந்து 3 ஆயிரம் பேர் வரை கலந்து கொண்டதாக போலீசார் தெரிவித்திருந்தனர். ஆனால் இன்று காலையில் அப்படி ஒன்றும் கூட்டம் இருந்தது போல் தெரியவில்லை. மொத்தமே 500 அல்லது 600 பேர்தான் அங்கு கூடியிருந்தனர். அன்னா ஹசாரே குழுவின் முக்கிய நபரான கெஜ்ரிவால் உத்தரப்பிரதேசத்தில் நீதிமன்ற விசாரணைக்காக சென்றுவிட்டார். காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் தற்போது கலந்து கொள்ளாத அன்னா ஹசாரே 29-ந் தேதி போராட்டத்தில் கலந்து கொள்கிறார்.