லண்டன் ஒலிம்பிக் போட்டியில் மகளிர் குத்துச் சண்டை 51 கிலோ எடைப் பிரிவில் இந்தியான் மேரி கோம் அரை இறுதிக்குள் அபாரமாக புகுந்தார். இதன் மூலம் அவருக்கும், இந்தியாவுக்கும் ஒரு பதக்கம் உறுதியாகி விட்டது.

ஒலிம்பிக் போட்டிகளில் முதல் முறையாக மகளிர் குத்துச் சண்டை நடப்பு ஆண்டில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவரான இந்தியாவின் மேரி கோம் பங்கேற்றுள்ளார். இந்தியாவின் சார்பில் இவர் ஒருவர்தான் கலந்து கொண்டுள்ளார்.

மகளிர் குத்துச் சண்டை தகுதிச் சுற்று நேற்று நடைபெற்றது. இதில் போலந்தின் கரோலினாவுடன் மேரிகோம் நேற்று மோதினார். ஆட்டத்தின் தொடக்கம் முதலே கரோலினாவுக்கு எதிராக மேரி கோம் அதிரடி கிளப்பினார். கரோலினாவும் சளைக்காமல் பதில் தாக்குதல் தொடுக்க முதல் சுற்றில் இருவரும் சமநிலை பெற்றிருந்தனர்.

2-வது சுற்றில் மேரி கோமை கரோலினா நிலைகுலையச் செய்த நிலையிலும் கூட மேரி கோம் அபாரமாக விளையாடினார். 2-வது சுற்றில் 5-4 கணக்கில் மேரிகோம் முன்னிலை பெற்றார். 3-வது சுற்றில் தமது அசராத ஆட்டத்தைக் கைவிடாத மேரிகோம் 7-3 என்ற கணக்கில் அபாரமாக கைப்பற்றினார். 4-வது சுற்று 4-4 என்ற கணக்கில் முடிந்தாலும் மொத்தம் 19-14 என்ற புள்ளி கணக்கில் கரோலினாவை வீழ்த்தினார் இந்தியாவின் மேரிகோம்.

கரோலினாவை வீழ்த்தியதன் மூலம் காலிறுதிக்குத் தகுதி பெற்றார் மேரிகோம். இதையடுத்து காலிறுதி ஆட்டத்தில் டுனீசியாவின் மரோவா ரஹாலியை
இன்று அவர் எதிர்கொண்டார்.

இப்போட்டியில் அபாரமாக விளையாடிய மேரி கோம், ரஹாலியை 15-6 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றியைத் தட்டிச் சென்றார். அரை இறுதிக்குள்ளும் நுழைந்தார். இதன் மூலம் மேரி கோமுக்கு நிச்சயம் ஒரு பதக்கம் கிடைக்கும் என்பது உறுதியாகி விட்டது. அரை இறுதியில் வென்றால் தங்கம் அல்லது வெள்ளியை எதிர்பார்க்கலாம். தோற்றால் வெண்கலம் கிடைக்கும். அரை இறுதியில் தோற்கும் இருவருக்குமே வெண்கலப் பதக்கம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் மேரி கோம், வெண்கலத்திற்கான வீராங்கனையே அல்ல, அவர் தங்கத்தை மட்டுமே குறி வைத்து போர்க்குதிரை போல பாய்ந்து கொண்டிருக்கிறார் என்பதால் மேரி கோம் நாட்டுக்கும், தனக்கும் பெருமை சேர்ப்பார் என்பது உறுதி.

பதக்கம் பெறும் 3வது வீராங்கனை

கர்ணம் மல்லேஸ்வரி, சாய்னா நேவால் ஆகியோர் இதுவரை ஒலிம்பிக்கில் பதக்கம் ஒன்றை வென்ற தனி நபர் வீராங்கனைகள் ஆவர். அதிலும் சாய்னா நடப்பு ஒலிம்பிக் போட்டியில்தான் வெண்கலம் வென்றுள்ளார். இந்த வரிசையில் தற்போது மேரி கோமும் இணைகிறார்.

மேரி தங்கம் வெல்ல அத்தனை இந்தியர்களும் ஒன்ருபட்டு பிரார்த்திப்போம்.