ஒலிம்பிக் போட்டியின் இறுதிநாளான இன்று நடைபெற்ற ஆடவர் 66 கிலோ மல்யுத்தப் போட்டியில் இந்தியாவின் சுஷில் குமார் தங்கப் பதக்கம் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு பொய்த்துப் போனது. இறுதிப் போட்டியில் ஜப்பான் வீரரிடம் தோற்ற சுஷில்குமார் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் பெற்றுத் தரும் என்று எதிர்பார்க்கப்பட்ட விளையாட்டுகளில் மல்யுத்தமும் ஒன்று. கடந்த ஒலிம்பிக்கில் மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு வெண்கலம் பெற்றுத் தந்தவர் சுஷில்குமார். இவர்தான் நடப்பு லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இந்திய தேசியக் கொடியை ஏந்திச் சென்ற பெருமைக்குரியவர்.

மல்யுத்தப் போட்டிகள் பொதுவாக எதிர்பார்ப்புகளை பொய்த்துபோக வைத்துவிட்ட நிலையில் சுஷில்குமாரின் மீது அனைவரது கவனமும் திரும்பியது. டெல்லி காமன்வெல்த் போட்டியில் தங்கம் பெற்றுத் தந்த சுஷில்குமார் இப்போதும் சாதிக்க வேண்டும் என்பதுதான் அனைவரது எதிர்பார்ப்பாக இருந்தது இந்த ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதுதான் தனது லட்சியம் என்று ஏற்கெனவே சுஷில் குமார் கூறியும் இருந்தார்.

இந்நிலையில் இன்று நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் உஸ்பெகிஸ்தான் வீரரை 3-1 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி அரை இறுதிப் போட்டியில் சுஷில்குமார் நுழைந்தார்.அதன் பின்னர் அரை இறுதியில் கஜகஸ்தான் வீரர் டன டரோவாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு நுழைந்துவிட்டார் சுஷில்குமார். இதன் மூலம் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைப்பது உறுதியாகி இருந்தது. ஒலிம்பிக் வரலாற்றில் மல்யுத்தப் போட்டியில் முதல் முறையாக இந்திய வீரர் ஒருவர் இறுதிப் போட்டியில் நுழைந்திருப்பதன் மூலம் சரித்திரம் படைத்தும் இருந்தார்..

மாலையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஜப்பானின் சுக்ரோவை சுஷில்குமார் எதிர்கொண்டார். ஆனால் ஜப்பான் வீரர் 1-0,3-1 என்ற புள்ளி கணக்கில் சுஷில்குமாரை வீழ்த்தி அவர் தங்கத்தை தட்டிச் சென்றார். இந்தியாவின் சுஷில்குமாருக்கு வெள்ளிப் பதக்கமே கிடைத்தது.