ஜெயலலிதா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி

இஸ்லாமியப் பெருமக்கள் மன மகிழ்ச்சியுடன் கொண்டாடும் ஈகைத் திருநாளாம் ரம்ஜான் திருநாளில் எனது உள்ளம் கனிந்த ரம்ஜான் நல்வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

ஏழை, எளியோருக்கு உணவு வழங்கி தாமும் உண்டு, உள்ளம் மகிழும் இனிய திருநாள் ரம்ஜான் திருநாள் ஆகும். முப்பது நாட்கள் பகலில் பருகாமலும் உண்ணாமலும் நோன்பு இருந்து, தீய எண்ணங்கள் அனைத்தையும் அழித்து, இறைவனை வழிபட்டு, அனைவரும் நலம் பெற்று வாழ வேண்டும் என்ற உயரிய குறிக்கோளுடன் இஸ்லாமியப் பெருமக்கள் ரம்ஜான் திருநாளைக் கொண்டாடி மகிழ்கிறார்கள்.

இந்த இனிய திருநாளில் என் அன்பிற்குரிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த ரம்ஜான் வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை உரித்தாக்கிக் கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

கருணாநிதி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி

தொழிலாளரின் வியர்வை உலரும் முன் அவன் கூலியைக் கொடுத்து விடு; அநீதி செய்யும் அரசை எதிர்த்துப் போராடு; உணவு தானியங்களைப் பதுக்கி வைத்துச் செயற்கைப் பஞ்சத்தை ஏற்படுத்தாதே; அண்டை வீட்டுக்காரன் பசியோடு இருக்கும்போது நீ மட்டும் சாப்பிடாதே; உன் உழைப்பில் கிடைக்கும் வருவாயில் ஒரு பகுதியை ஏழைகளுக்குக் கொடு எனப் போதித்து மனித நேயம் வளர்க்க வழிகாட்டியவர் நபிகள் நாயகம் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.


வைகோ வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி

பசித்திருந்து, தனித்திருந்து, விழித்திருந்து இறைவனை நினைத்திருந்து நோன்பெனும் மாண்பைத் தழுவியிருந்த இஸ்லாமியப் பெருமக்கள் ஈதுல் ஃபித்ர் என்னும் திருநாளைப் பெருநாளாகக் கொண்டாடும் நன்னாள் இன்னாள்.
எந்தச் சுவையும் அருகில் இருந்தாலும் அவற்றை நாடாமல் ஐம்புலன்களையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நோன்பு மனித மனங்களில் புனிதம் பூக்கும் மாண்புடையதாகும். ஏழை எளியவர்க்கு வழங்கிட வேண்டிய ஏழை வரியை உவப்புடன் ஜக்காத் ஆக வழங்கி ஈந்துவக்கும் இன்பம் எய்தும் ‘ஈதுல்’ பெருநாள் இந்நாள்.
அண்ணல் எம்பெருமானார் (ஸல்) சொன்ன அமுத மொழியைப் பின்பற்றி உருவமற்ற ஏக இறைவனை வணங்கியும், சகோதர சமயத்தாருடன் இணங்கியும் ஏழை எளியோர்க்கு வழங்கியும் வாழ்ந்து காட்டும் இவ்வினிய நன்னாளில் சமய ஒற்றுமை தழைக்கவும், சமய நல்லிணக்கம் செழிக்கவும், வாழையடி வாழையெனத் தமிழகத்தில் வளர்ந்தோங்கி வரும் நல்லிணக்கத்தைப் பேணி வளர்க்க சூளுரைத்து மதிமுக சார்பில் இனிய ரமலான் வாழ்த்துகளை இஸ்லாமியப் பெருமக்களுக்குத் தெரிவித்துக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன் என்று வாழ்த்தியுள்ளார் வைகோ.

விஜயகாந்த் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி

இஸ்லாமியர்களுக்கு ரமலான் மாதம் புனிதமானது. இம்மாதத்தில்தான் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான நோன்பினை மேற்கொள்கின்றனர். பசிப்பிணியின் தன்மை பற்றி அனுபவப்பூர்வமாக அறிந்து கொள்ளும் வாய்ப்பை இந்நோன்பு அளிக்கிறது. இதன் மூலம் வறுமையை ஒழிப்பதற்கும், ஏழைகளுக்கு உதவுவதற்கும் உரிய கடமை வலியுறுத்தப்படுகிறது. இருப்பவர்கள், இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவுவதன் மூலம் ஒரு சமூக அமைதியையும், ஒற்றுமையையும் நிலைநாட்ட முடியும்.

காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி

புனித இஸ்லாம் வலியுறுத்திய நோன்புப் பெருநாட்களைத் தொடர்ந்து இன்று ஈகைத் திருநாளாக இஸ்லாமியப் பெருமக்களால் போற்றி வணங்கப்படும் ரம்ஜான் பண்டிகை நாடெங்கும் உவகையோடு கொண்டாடப்படுகிறது.

அண்ணல் நபிகள் நாயகம் அருளிய அறநெறிக்கேற்ப ஐம்பெரும் கடமைகளுள் ஒன்றான முப்பது நாட்கள் நோன்பிருந்து வசதி படைத்தோரும் பசியின் கொடுமையை உணர்ந்து ஏழை எளியோருக்கு உதவிடும் ‘ஸஹாத்” என்னும் கடமையை நிறைவேற்றும் உன்னத விழா ரம்ஜான்.

இஸ்லாமியர் உள்ளிட்ட சிறுபான்மை மக்களின் கல்வி, பொருளாதார மேம்பாட்டிற்கு முதல் பிரதமர் நேரு காலம் தொடங்கி இந்திரா, ராஜீவ், ஆகிய பிரதமர்களின் காலத்திலும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. அதைத் தொடர்ந்து அவர்களது

வழிநின்று இன்றைக்கு சோனியா வழிகாட்டுதலில், பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய அரசு அம்மக்களுக்கென்று தனி அமைச்சகம், தனி அமைச்சரை உருவாக்கியுள்ளது. மேலும் அவர்களது சமூகப் பொருளாதார நிலையைக் கண்டறிய நீதியரசர் மிஸ்ரா தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டது. அக்கமிஷன் பரிந்துரையை ஏற்று சிறுபான்மை மக்களின் வாழ்வு உயர்வுக்கு 15 அம்சத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அவர்களது நலனுக்கென்று 165 பணிகளுக்கு மொத்தம் பல்லாயிரம் கோடி
செலவிடப்படுகிறது.

இந்நன்னாளில் இறைவனின் இறுதித் தூதர்அண்ணல் நபிகள் நாயகம் அவர்கள் உலகுக்கு போதித்த மனிதநேயம், நல்லொழுக்கம், அன்பு, அமைதி, சமாதானம், சகோதரத்துவம் ஆகிய உயரிய நெறிகளை ஏற்று வாழ்ந்து, நாட்டில் மத, இனப் பிரிவுகளிடையே ஒற்றுமை, ஒருமைப்பாடு மிளிர்ந்து, வன்முறைகள் ஒழிந்து நல்லிணக்கம் உருவாக அனைவரும் ஒன்றிணைந்து உழைப்போம், உயர்வோம் என்றுகூறி அனைத்து இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பிலும், என் சார்பிலும் மனமுவந்த ரம்ஜான் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.