இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் மறுவாழ்வுக்காக இந்தியா ஒதுக்கிய நிதி தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா விளக்கம் அளித்துள்ளார்.
மாநிலங்களவையில் அ.தி.மு.க. உறுப்பினர் மைத்ரேயன் எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக எஸ்.எம். கிருஷ்ணா அளித்த பதில்:
இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வு, மீள் குடியேற்றத்துக்காகக் அந்நாட்டுக்கு

 • 2009-10-ம் நிதியாண்டில் ரூ. 68.96 கோடி,
 • 2010-11-ம் நிதியாண்டில் ரூ. 93.86 கோடி,
 • 2011-12-ம் நிதியாண்டில் ரூ. 181.94 கோடி
 • வழங்கப்பட்டது.
 • பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த நிதியில் ரேஷன் பொருள்கள், ஆடைகள், சமையல் பாத்திரங்கள் வழங்கப்பட்டன.
 • வடக்கு மாகாணத்தில் தாற்காலிக மருத்துவமனைகள் நிறுவப்பட்டன. மருந்துகள் வழங்கப்பட்டன.
 • நிலத்தில் புதைத்துவைக்கப்பட்டிருந்த கண்ணி வெடிகளைக் கண்டறிந்து செயலிழக்கச் செய்ய இந்தியாவிலிருந்து 7 குழுக்கள் அனுப்பப்பட்டன.
 • உள்நாட்டிலேயே இடம் பெயர்ந்தோருக்காக 10,400 மெட்ரிக் டன்னுக்கும் மேற்பட்ட தங்குமிடப் பொருள்கள்,
 • வேளாண் உற்பத்தியைத் தொடங்குவதற்குத் தேவைப்படும் 95 ஆயிரம் பொருள்கள்,
 • 500 டிராக்டர்களும் வழங்கப்பட்டன.
 • இவை தவிர வடக்கு, கிழக்கு, மத்திய மாகாணங்களில் பயணிகள் பேருந்து சேவைக்காக 55 பேருந்துகளை இந்தியா இலவசமாக வழங்கியது.
 • போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு யாழ்ப்பாணம், வவுனியாவில் செயற்கைக் கை, கால் உறுப்புகளை பொருத்துவதற்காக இந்திய நிபுணர்கள் ஒரு மாத முகாம் நடத்தினர்.
 • போரின்போது பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளைச் சரி செய்ய 4 லட்சம் சிமெண்ட் மூட்டைகள் இலவசமாக வழங்கப்பட்டன.
 • மறுவாழ்வு, மீள்குடியேற்றப் பணிகளைத் தொடர்ந்து நிறைவேற்றுவதற்காக நடப்பாண்டில் ரூ. 290 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
 • வடக்கு ரயில்வே பாதை அமைக்கும் பணிகளுக்காக 80 கோடி அமெரிக்க டாலர்களை இலங்கைக்கு இந்தியா கடனாக வழங்கியுள்ளது.

இந்த நிதி அனைத்தும் சரியான முறையில் செலவிடப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க இரு நாட்டு அரசுகளின் சார்பில் உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார் எஸ்.எம்.கிருஷ்ணா