ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது. இதன் மூலம் ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட்போட்டிகளில் இந்திய அணி மூன்றாவது முறையாக கோப்பையைக் கைப்பற்றியுள்ளது.

இன்றைய போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் உன்முக்த் சந்த், பீல்டிங்கை தேர்வு செய்தார். ஆஸ்திரேலிய அணி தொடக்கத்தில் தட்டுத் தடுமாறி ரன்களை எடுத்துக் கொண்டிருந்தது. 38 ரன்களில் 4 விக்கெட்டுகளைப் பறிகொடுத்திருந்த நிலையில் அந்த அணியின் கேப்டன் வில்லியம் அதிரடியாக ஆடினார். அவர் 87 ரன்களை எடுத்தார். அவருக்கு டிராவிஸ் ஹெட் கை கொடுத்தார். டிராவிஸ் 37 ரன்களை எடுத்தார். 200 ரன்களைக் கூட எடுக்காது என்று நினைத்திருந்த ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் இழப்புக்கு 225 ரன்களை எடுத்தது. இந்திய அணியின் சந்தீப் சர்மா 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

226 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி அடுத்து களமிறங்கியது. இந்திய அணி வீரர்கள் தொடக்கம் முதலே விக்கெட்டுகளை காப்பாற்றிக் கொண்டு அபாரமாக ஆடினர். இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 227 ரன்களை எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இந்திய அணியின் உன்முத் சந்த் 111 ரன்களைக் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவை வீழ்த்தியிருக்கும் இந்தியா ஜூனியர் உலகக் கோப்பையை 3-வது முறையாக கைப்பற்றியிருக்கிறது.