2006ம் ஆண்டு துள்சிராம் பிரஜாபதி போலி என்கவுண்டரில் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குஜராத் மாநில முன்னாள் அமைச்சரும், முதல்வர் நரேந்திர மோடிக்கு மிகவும் நெருக்கமானவருமான அமீத் ஷா உள்ளிட்ட 20 பேர் மீது குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2006ம் ஆண்டு டிசம்பர் மாத் சோராபுதீன் ஷேக் என்பவரை போலி என்கவுண்டர் மூலம் குஜராத் போலீஸார் கொலை செய்தனர். அதேபோல அவரது மனைவியும் படுகொலை செய்யப்பட்டார். உடலை சாம்பல் கூட கிடைக்காத வகையில் எரித்து விட்டனர்.

இந்த விஷயம், துள்சிராம் பிரஜாபதிக்கு தெரியும் என்பதால் அவரையும் 2 வாரங்கள் கழித்து போலி என்கவுண்டரில் கொன்று விட்டனர். பிரஜாபதியைக் கொலை செய்தது குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநில போலீஸார் ஆவர். குஜராத் மாநிலம் சப்ரி என்ற கிராமத்தில் வைத்து டிசம்பர் 28ம் தேதி பிரஜாபதி கொலை செய்யபப்பட்டார்.

பிரஜாபதி போலி என்கவுண்டர் வழக்கில் குஜராத் முன்னாள் அமைச்சர் அமீத் ஷா சிக்கினார். அவரது உத்தரவின்பேரில்தான் இந்தக் கொலை நடந்ததாக சிபிஐ கண்டுபிடித்து அறிவித்தது. இதையடுத்து ஷா பதவியிலிருந்து விலக நேரிட்டது. இதையடுத்து அவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.

தற்போது பிரஜாபதி போலி என்கவுண்டர் வழக்கில் சிபிஐ அதிகாரிகள் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளனர். அதில் அமீத் ஷா உள்பட 20 பேரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. அவர்களில் 12 பேருக்கும் மேற்பட்டோர் ஐபிஎஸ் அதிகாரிகள் ஆவர். அவர்களில் முன்னாள் குற்றப் பிரிவு சிஐடி தலைவர் ஓ.பி.மாத்தூரும் ஒருவர்.

முதல்வர் நரேந்திர மோடிக்கு மிகவும் பிடித்த அதிகாரி இந்த மாத்தூர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் முன்னாள் டிஜிபி பி.சி.பாண்டேவும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளார். இவரும் மோடிக்கு மிகவும் வேண்டப்பட்டவர்தான். வழக்கை சீர்குலைக்க முயன்றதாக பாண்டே மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மாத்தூர் மீது கொலை, சதி, சாட்சியங்களை அழித்தல் ஆகிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

இவர்கள் தவிர குற்றப் பிரிவு சிஐடி அதிகாரி கீதா ஜோஹ்ரி, விசாரணை அதிகாரி ஆர்.கே.படேல் ஆகியோர் மீது குற்றச்சதி, கொலை, சாட்சியங்களை அழித்தல் ஆகிய புகார்கள் கூறப்பட்டுள்ளன. இவர்கள்தான் சிபிஐக்கு முன்பாக இந்த வழக்கை விசாரித்தவர்கள் ஆவர்.

மேலும் ஐபிஎஸ் அதிகாரிகள் டி.ஜி.வன்ஸாரா, ராஜ்குமார் பாண்டியன், திணேஷ், ராஜஸ்தான் இன்ஸ்பெக்டர் அப்துல் ரஹ்மான் ஷேக் ஆகியோரது பெயர்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இவர்கள் அனைவருமே ஏற்கனவே சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிபிஐ தனது குற்றப்பத்திரிக்கையில் கூறுகையில், துள்சிராம் பிரஜாபதி ஒரு கூலிப்படையைச் சேர்ந்தவர். சோராபுதீன் மற்றும் அவரது மனைவி கெளசர் பீ ஆகியோரது கொலைக்கு ஒரே நேரடி சாட்சி இவர் மட்டுமே. இதையடுத்து பிரஜாபதியை திட்டமிட்டு போலி என்கவுண்டர் மூலம் சுட்டுக் கொன்றனர் என்று தெரிவித்துள்ளது.

இந்த வழக்கில் கந்த 2010ம் ஆண்டு ஜூலை 25ம் தேதி கைது செய்யப்பட்டார் அமீத் ஷா. அதே ஆண்டு அக்டோபர் 29ம் தேதி அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இருப்பினும் குஜராத் மாநிலத்திற்குள் நுழைய அவருக்குத் தடை விதிக்கப்பட்டது.