இலங்கையின் யுத்த மோதல்கள் இடம்பெற்ற வடக்குகிழக்குப் பிரதேசத்தில் இந்திய அரசின் நிதியுதவியில் 50 ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகள் வடமாகாணத்தில் மன்னார் உட்பட ஐந்து மாவட்டங்களி;ல் ஆரம்பித்து வைக்கப்பட்டிருக்கின்றது.

இதன் முதல் வைபவம் மன்னார் மாந்தை மேற்கு பிரதேசத்தில் பெரியமடு மத்திய மகாவித்தியாலயத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

 

மகாத்மா காந்தியின் 143 ஆவது பிறந்தநாளாகிய இன்று மகாத்மாவின் சிலைக்கு மலர்மாலைகள் சூட்டி ஆரம்பிக்கப்பட்ட இந்த வைபவத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச, தேசிய நிர்மாணத்துறை அமைச்சர் விமல் வீரவன்ச, கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் ரிசாட் பதியுதீன் ஆகியோருடன் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அசோக் கே.காந்தா அவர்களும் கலந்து கொண்டார்.

இரண்டாம் கட்ட வீடமைப்பில் 43 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதாக இந்த வைபவத்தில் பயனாளிகளுக்கான முதற்கட்ட கொடுப்பனவுக்குரிய காசோலையை வழங்கி உரையாற்றிய இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அசோக் கே.காந்தா அவர்கள் கூறினார்.

இந்தியாவின் 50 ஆயிரம் வீட்டுத்திட்டத்தின் முன்னோடி திட்டமாகிய ஆயிரம் வீடுகள் ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்டு விட்டன. இரண்டாம் கட்டத்தில் 40 ஆயிரம் வீடுகள் வடமாகாணத்திலும் 3 ஆயிரம் வீடுகள் கிழக்கு மாகாணத்திலும் நிர்மாணிப்பதற்குத் திட்டமிடப்பட்டிருப்பதாக இலங்கைக்கான இந்தியத் தூதுவர் இந்த வைபவத்தில் உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.

வீடொன்றிற்கு ஐந்தரை லட்சம் ரூபா நிதியுதவி பயனாளிகளுக்கு நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்கில் நான்கு கட்டங்களி;ல் செலுத்தப்படவுள்ளன. இந்த ஆரம்ப வைபவத்தில் முதற் கட்டமாக குடும்பம் ஒன்றிற்கு ஒரு லட்சம் ரூபா நிதியை 1500 குடும்பங்களுக்கு வழங்கப்படுவதாக இந்தியத் தூதுவர் தெரிவித்துள்ளார்.

காலக்கெடு

இந்த வேலைத்திட்டத்தின் கீழ் அடுத்த வருடம் ஆகஸ்ட் மாதமளவில் பத்தாயிரம் வீடுகளைக் கட்டி முடிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது.

அங்குலம் அங்குலமாக புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடிகளை அகற்றும் பணியோடு மீள்குடியேற்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு, வீதிகள் திருத்தப்பட்டு, குடிநீர் வசதிகள் மின்விநியோகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கட்டுமாண பணிகள் மேற்கொள்ளப்பட்டு, மீள்குடியமர்த்தப்பட்ட குடும்பங்களுக்கான தற்காலிக வீடுகள் அமைக்கப்பட்டதன் பின்னர், இப்போது இந்தியாவின் உதவியோடு நிரந்தர வீடுகள் அமைக்கப்படுவதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் இந்த வைபவத்தில் உரையாற்றுகையில் தெரிவித்துள்ளார்.

எனினும், வீடுகள் இல்லாத அனைவருக்கும் வழங்குவதற்கு இந்தியாவின் உதவியில் கிடைக்கின்ற 50 ஆயிரம் வீடுகளும் போதாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தத்தினால் இடம்பெயர்ந்திருந்த 3 லட்சம் பேரும் மீள்குடியேற்றம் செய்யப்பட்டிருக்கின்றார்கள். இருப்பினும் இன்னும் மீள்குடியேற்றம் செய்யப்படாமலிருப்பவர்களையும் நாங்கள் மீள்குடியேற்றம் செய்வோம். அவர்களுக்கான வீடுகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்து கொடுப்போம் என்ற உறுதிமொழியையும் அமைச்சர் பசில் ராஜபக்ச இந்த வைபவத்தில் வழங்கியுள்ளார்.

thank BBC

Advertisements