நியூயார்க்கில் உள்ள அமெரிக்க ரிசர்வ் வங்கியின் தலைமையகத்தை குண்டு வைத்து தகர்க்க முயன்றதாக கைதான வங்கதேசத்தைச் சேர்ந்த வாலிபருக்கு அமெரிக்காவைச் சேர்ந்த ஹோவர்ட் வில்லி கார்ட்டர் என்ற நபர் உதவியது தெரியவந்துள்ளது.
கார்ட்டர் ஏற்கனவே குழந்தைகளை வைத்து எடுக்கப்பட்ட ஆபாச படங்கள், வீடியோக்கள் வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வங்கதேசத்தைச் சேர்ந்த முகம்மத் அசான் நபீஸ் என்ற 21 வயது வாலிபர் வெடிமருந்துகளை நிரப்பிய வேனைக் கொண்டு அமெரிக்க ரிசர்வ் வங்கியை தகர்க்க முயன்றதற்காக எப்பிஐ போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்,
இந் நிலையில் இவருக்கும் கார்ட்டருக்கும் இருந்த தொடர்புகளும் அம்பலமாகியுள்ளன. அமெரிக்காவில் தீவிரவாதத் தாக்குதல்களை நடத்த ஹபீசுக்கு கார்ட்டர் உதவி வந்துள்ளார்.
Yaqeen என்ற பெயரிலான இ-மெயில் மூலம் ஹபீசுடன் கார்ட்டர் தொடர்பில் இருந்ததாக எப்பிஐ குற்றம் சாட்டியுள்ளது.
36 வயதான இந்த கார்ட்டர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார். குழந்தைகளைக் கொண்டு எடுக்கப்பட்ட 3 ஆபாச வீடியோக்கள் மற்றும் ஆயிரக்கணக்கான படங்களை வைத்திருந்ததற்காக இவனை போலீசார் கைது செய்தனர். இந்தப் படங்கள் இருந்த கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க் பரிமுதல் செய்யப்பட்டுள்ளது.
டார்கெட் ஒபாமாவா?:
அல் கொய்தா தாக்குதலில் சிதைந்த நியூயார்க் சர்வேதச வர்த்தக மைய கட்டிடங்கள் இருந்த இடத்திற்கு மிக அருகில் தான் இந்த அமெரிக்க ரிசர்வ் வங்கியின் தலைமையகமும் உள்ளது.
இந்தப் பகுதிக்கு அமெரிக்க அதிபர் ஒபாமாவும் அவரை எதிர்த்துப் போட்டியிடும் மிட் ரோம்னியும் வருவதாக இருந்த நிலையில் தான், இந்தத் தாக்குதலுக்கு நபீஸ் திட்டமிட்டிருந்தார். எனவே, இந்தத் தாக்குதலே ஒபாமாவை குறி வைத்தே நடத்தப்பட இருந்ததாகக் கருதப்படுகிறது.
ஆனால், நபீஸுடன் கலந்துவிட்ட எப்பிஐ உளவாளிகள் அவரது ஒவ்வொரு அசைவையும் கண்காணித்து வந்ததால் இந்தத் தாக்குதல் கடைசி நிலை போய் முறியடிக்கப்பட்டுள்ளது.
ஒபாமா மகள்கள் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்:
இந் நிலையில் ஒபாமா- மிக்செல் தம்பதியின் மகள்கள் மாலியா (14), சஷா (11) ஆகியோர் படிக்கும் வாஷிங்டன் சிட்வெல் பிரண்ட்ஸ் தனியார் பள்ளிக்கு நேற்று டெலிபோனில் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
இதையடுத்து, பள்ளியில் இருந்து மாணவ-மாணவிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். பின்னர் அவர்களது பைகள் அனைத்தும் சோதனையிடப்பட்டன. பள்ளயிலும் சோதனை நடந்தது. ஆனால், ஆபத்தான பொருள் எதுவும் சிக்கவில்லை.
இதுகுறித்த தகவல் பள்ளியின் வெப்சைட்டில் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் இது குறித்து வெள்ளை மாளிகையும் எந்தத் தகவலையும் வெளியிடவில்லை.