அமெரிக்காவின் நியூயார்க் உள்ளிட்ட பல நகரங்கள் மின்சாரம் இன்றி இருளிலேயே பல நாட்களாக மூழ்கிக் கிடக்கிறது! அமெரிக்காவை தாக்கி வரும் ‘சான்டி’ புயல்தான் அந்நாட்டு வரலாற்றிலேயே மிகப் பெரிய இயற்கை துயரமாக உருவெடுத்திருக்கிறது.

சான்டியால் ஒவ்வொரு அமெரிக்க மாகாணமுமே புரட்டிப் போடப்பட்டு வருகிறது. வாஷிங்டன், பால்டிமோர், பிலடெல்பியா, நியூயார்க், போஸ்டன் ஆகியவை பெரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றன.

இந்த சான்டி புயலின் கோரத்தாண்டவத்தால் சுமார் 12 பில்லியன் டாலர் அளவுக்கு சேதம் ஏற்படலாம் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. சான்டி புயல் இலக்கு வைத்திருக்கும் நகரங்கள் பலவற்றிலும் மின்சாரம் தொடர்ந்து விநியோகிக்கப்படவில்லை. மருத்துவமனைகளில் பேக்அப் மின்சாரமும் இல்லை. இதனால் மருத்துவமனைகளில் இருந்து நோயாளிகள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். மன்ஹாட்டனில் 13 அடி உயர சுவர் கூட இந்தப் புயலுக்கு தப்பவில்லை. அமெரிக்க நகரங்கள் எங்கெங்கும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

அமெரிக்கா முழுவதும் சுமார் 5.7 மில்லியன் பேர் மின்சாரமின்றி தவித்து வருகின்றனர்.

அமெரிக்காவில் சுமார் 7ஆயிரம் விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. பல விமான நிலையங்கள் இழுத்து மூடப்பட்டுவிட்டன. இதே நிலைமைதான் ரயில் மற்றும் பேருந்து சேவைகளுக்கும்! சுரங்கப் பாதைகளும் மூடப்பட்டுவிட்டன! சான்டி புயல் பல இடங்களில் பனிமழையையும் கொண்டு வந்திருக்கிறது

கடந்த ஆண்டு அமெரிக்காவைத் தாக்கிய ஐரீன் புயல் சுமார் 100 மில்லியன் டாலர் மதிப்பிலான சேதத்தை ஏற்படுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.