சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ளதால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 1 குறைக்கப்படவுள்ளது.

உலக அளவில் கச்சா எண்ணெய் விலை நிலவரம் மற்றும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், 15 நாட்களுக்கு ஒரு முறை பெட்ரோல் விலையை மத்திய எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.

அதன்படி கடந்த மாதம் 27ம் தேதி பெட்ரோலி விலை லிட்டருக்கு 29 பைசா உயர்த்தப்பட்டது.

இந் நிலையில் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ளதால் மத்திய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 2 வரை விலையைக் குறைக்கும் நிலையில் உள்ளன. ஆனால், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பில் சரிவு ஏற்பட்டுள்ளதால், கச்சா எண்ணெய் இறக்குமதிக்கான செலவு அதிகரித்துள்ளது.

இவை இரண்டையும் கணக்கில் எடுத்தால் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 1 மட்டுமே குறைக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் இந்த வாரத்தில் விலை குறைக்கப்படும் என்று நாட்டின் பெரிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தலைவர் ஆர்.எஸ்.புட்டோலா தெரித்துள்ளார்.