துப்பாக்கி படத்தில் இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் வகையில் காட்சி இடம்பெற்றதற்குப் பிராயச்சித்தமாக நடிகர் விஜய் ஒரு படத்தில் முஸ்லிமாக நடிப்பார் என்று அறிவித்துள்ளார் அவர் தந்தை இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கி படத்தில் முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகக் காட்டி அவமானப்படுத்திவிட்டதாக 24 முஸ்லிம் அமைப்புகள் போர்க்கொடி பிடித்தன.

நபிகள் நாயகத்தை அவமதித்த ஹாலிவுட் பட விவகாரத்தில் இந்த அமைப்புகள் சில தினங்களுக்கு முன் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை நகரையே ஸ்தம்பிக்க வைத்துவிட்டது. இதே நிலை துப்பாக்கி படத்துக்கு நேர்ந்துவிட்டால் என்ன செய்வது என்று பயந்துபோன துப்பாக்கி தயாரிப்பாளர், இயக்குநர், ஹீரோ விஜய் ஆகியோர், அதிரடியாக சரண்டர் படலத்தை அரங்கேற்றிவிட்டனர்.

அனைத்து முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்களையும் நேற்று சென்னையில் சந்தித்த இயக்குநர் முருகதாஸ், தாணு, எஸ் ஏ சந்திரசேகரன், அவர்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரினர். காட்சிகளை நீக்கவும் ஒப்புக் கொண்டனர்.

அடுத்து எஸ்ஏ சந்திரசேகரன் அறிவித்ததுதான் இந்த சரண்டர் படலத்தின் உச்சகட்டம்.

அதை அவரது வார்த்தைகளில் சொல்ல வேண்டும் என்றால், “என் மகன் விஜய் தமிழகத்தின் ஒவ்வொரு வீட்டுக்கும் செல்லப்பிள்ளை. சாதி, மத வேறுபாடுகளே அவனுக்கு இல்லை.

இந்தப் படத்தில் இஸ்லாமிய உறவுகளுக்கு எதிராக தெரியாமல் இடம்பெற்ற சில காட்சிகளுக்காக வருந்துகிறோம். இதற்கு பிராயச்சித்தமாக என் மகன் ஒரு படத்தில் முஸ்லிம் வேடத்தில் நடிப்பார்,” என்றார்.