தேர்தல் வந்துவிட்டால் ‘அதிகார’ போதையை தக்க வைத்துக் கொள்ள அல்லது எட்டிப் பிடிக்க எந்த எல்லைக்கும் அரசியல்வாதிகள் செல்வார்கள் என்பதற்கு மிகச் சிறந்த ‘உதாரண’மாக உருவெடுத்திருக்கிறது இஸ்ரேல்.. அந்த நாட்டில் தேர்தல் நடைபெறப் போகிறது என்றாலே பாலஸ்தீனர்களைப் பலியெடுத்து அந்த அப்பாவிகளின் ரத்தத்தில் அதிகாரத்தைக் கைப்பற்றுவது வழக்கமாகிவிட்டது.

பாலஸ்தீனத்தின் காசா பகுதி மீது இஸ்ரேல் இப்படி கொலைவெறியோடு தாக்குதல் நடத்தி வருவதற்கு சொல்லப்படுகிற காரணம் என்ன? “நவம்பர் 13-ந் தேதிக்கு முன்பு வரை சுமார் 850 ராக்கெட்டுகளை இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தின் ஹமாஸ் மற்றும் இதர இயக்கத்தினர் வீசி தாக்குதல் நடத்தினர். இதில் 10 பேர் உயிரிழந்துவிட்டனர். இதனால் பதில் தாக்குதல் நடத்துகிறோம்” என்கிறது இஸ்ரேல்.

இஸ்ரேல்- பாலஸ்தீனம் பின்னணி (2008 தேர்தல் வரை)

இஸ்ரேல் என்ற நாடு உருவாக்கப்பட்டதே பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியை வெட்டித்தான்! அந்த நாடு உருவாக்கப்பட்ட நாள் முதலே இரு நாடுகளிடையேயான யுத்தம் அரை நூற்றாண்டுகளாக நீடித்தே வருகிறது. 1967-ல் பாலஸ்தீனத்தின் காசா பகுதியை இஸ்ரேல் ஆக்கிரமித்தேவிட்டது. அப்போது எகிப்து, அரபுநாடுகள் ஆகியவை பாலஸ்தீனத்துடன் இணைந்து யுத்தத்தில் ஈடுபட்டன. அதன் பின்னர் காசா பகுதியிலிருந்து கடந்த 2005-ம் ஆண்டுதான் வெளியேறியது. அதன் பின்னர் 2007-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காசா பகுதியில் ஹமாஸ் இயக்கம் வெற்றி பெற விவகாரம் விஸ்வரூபமெடுத்தது. காசா எல்லைப் பகுதியை மூடியது இஸ்ரேல். உணவு, மருந்துகள் உள்ளிட்டவற்றை ஏற்றிச் செல்லக் கூடிய ஒரு சில வாகனங்களை மட்டுமே இஸ்ரேல் அனுமதித்தது.

இதனால் ஹமாஸ் இயக்கம் ஒரு யுக்தியை கடைபிடித்தது! காசாவிலிருந்து எகிப்து எல்லைக்கு 11 கிலோ மீட்டர் தொலைவுக்கு பல சுரங்கப்பாதைகளை அமைத்து அதன் வழியே அத்தியாவசியப் பொருட்களை கொண்டு வருவதை வழக்கமாக வைத்திருந்தனர். அதாவது சுரங்கவழி போக்குவரத்தை முதன்மையாக நம்பியிருந்தது காசா பகுதி.

இஸ்ரேலின் நடவடிக்கையை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையர் நவநீதம் பிள்ளை உள்ளிட்ட பலரும் வன்மையாக கண்டித்ததுடன் சர்வதேச விதிகளுக்கு எதிரானது என்றும் குற்றம்சாட்டினர். காசா பகுதியில் 34% பாலஸ்தீனர்கள் வேலைவாய்ப்பற்றவர்கள். 80% பேர் சர்வதேச உதவியினால் மட்டுமே வாழ்கின்றவர்கள். இப்படித்தான் காசாவின் நிலைமை இருந்து வருகிறது. இந்த நிலையில் 2009-ம் ஆண்டு தேர்தலை இஸ்ரேல் எதிர்நோக்குகிறது.

2009 தேர்தலும் தாக்குதலும்

2009-ம் ஆண்டு பிப்ரவரி 10-ந் தேத்தி அந்த நாடு தேர்தலை சந்திக்க வேண்டும். அதற்கு ஒரு சில மாதங்களுக்கு முன்பு காசா மீது மிகப் பெரும் தாக்குதலை இஸ்ரேல் நடத்தியது. தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு வரை அதாவது 2009 ஜனவரி வரை இந்த யுத்தம் நீடித்தது.

இந்த தாக்குதலில் 345 குழந்தைகள், 764 பொதுமக்கள் உட்பட 1397 பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர். இஸ்ரேல் ராணுவ வீரர்கள் 5 பேர் மட்டுமே உயிரிழந்திருக்கின்றனர். இக் கொடுந்தாக்குதலில் ஹமாஸ் இயக்கத்தின் காவல்துறை பொறுப்பாளர் கொல்லப்பட்டார்.

இந்த ரத்தம் தோய்ந்த கைகளுடன் தேர்தலை இஸ்ரேல் சந்தித்தது. அப்போது ஆளும் கட்சியாக இருந்த காதிமா, 22.47% வாக்குகளையும் தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் லிகுட் கட்சி 21.61% வாக்குகளையும் பெற்றது. ஒரு சீட் வித்தியாசத்தில் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் இருந்தது. இத்தேர்தலில் யூதப் பெருமிதம் பேசும் வலதுசாரி சிறு கட்சிகள் நிறையவே வெற்றி பெற்றிருந்தால் நெதன்யாகு தலைமையில் கூட்டரசு உருவானது. இஸ்ரேலைப் பொறுத்தவரையில் பாலஸ்தீனர்களுக்கு எதிராக யார் அதிகமான நடவடிக்கைகளை (தாக்குதல்கள் தொடுக்கிறார்களோ) எடுக்கிறார்களோ அவர்களுக்குத்தான் வாக்குகள் அதிகம் என்பதால் அத்தனை கட்சிகளுமே பாலஸ்தீனத்தை இல்லாதொழிப்போம் என்றே குரல் கொடுத்தன. இதனால்தான் பாலஸ்தீனத்தின் மீது கொடுந்தாக்குதல் நடத்திய பெருமிதத்தோடு இருந்த காதிமா கட்சியை வெற்றி பெற வைத்தனர்.

ஆனால் காதிமா கட்சியைவிட இன்னும் கொடுந்தாக்குதல் நடத்துவோம் என்று உறுதி கொடுத்து சிறு கட்சிகளுடன் இணைந்து கூட்டாட்சியை உருவாக்கினார் நெதன்யாகு. இப்பொழுது மீண்டும் தேர்தல் 2013-ஜனவரியில் வருகிறது. அப்புறம் என்ன?

2013 தேர்தலுக்காக கொலவெறி

2013 தேர்தலில் எப்படியும் மீண்டும் ஆட்சியைத் தக்க வைக்க வேண்டும் என்கிற வெறியோடு மிகச் சரியாக 2008-09ல் எப்படிப்பட்ட கொடுந்தாக்குதலை பாலஸ்தீனத்து மீது இஸ்ரேல்கட்டவிழ்த்துவிட்டதோ அதே பாணி இப்பொழுதும் களமிறக்கப்பட்டிருக்கிறது.

2008 தாக்குதலில் ஹமாஸ் இயக்க காவல்துறை பொறுப்பாளர் கொல்லப்பட்டார். இப்பொழுது ஹமாஸ் இயக்க முக்கிய தளபதி கொல்லப்பட்டார். 2008-09ல் காசா பகுதி எத்தகைய பேரவலத்தை எதிர்கொண்டதோ அதே பேரவலம் இப்பொழுதும் நிகழ்ந்ந்து கொண்டிருக்கிறது.

அனேகமாக நீடிக்கப் போகும் தற்போதைய தாக்குதலில் இப்பொழுதுதான் பலி எண்ணிக்கை 100ஐத் தாண்டியிருக்கிறது. இன்னும் ஆயிரமாயிரம் பாலஸ்தீனியர்களை கொன்றுவிட்டால் வரப் போகும் தேர்தலில் மீண்டும் தாமே அசைக்க முடியாத பிரதமர் என்பதுதான் நெதன்யாகுவின் ‘நெஞ்சக’ நினைப்பாக இருக்கலாம்! என்பதுதான் பொது கருத்தாக இருக்கிறது.