பாலஸ்தீனத்தின் காசா பகுதி மீதான இஸ்ரேல் நாட்டின் பெருந்தாக்குதல் 6 வது நாளாக இன்றும் நீடித்தது. இஸ்ரேலின் தொடர் தாக்குதலில் இதுவரை மொத்தம் 80 பேர் உயிரிழந்திருக்கின்றனர். சுமார் 700 பேர் படுகாயமடைந்திருப்பதாக பாலஸ்தீன அரசு அறிவித்திருக்கிறது. இதேபோல் இஸ்ரேல் அரசின் அனைத்து இணையதளங்களையும் முடக்கும் விதமான சைபர் யுத்தமும் மும்முரமடைந்திருக்கிறது.
நேற்று ஞாயிற்றுக்கிழமையன்று காசா நகரம் மீது மிக உக்கிரமான தாக்குதலை இஸ்ரேல் நடத்தியது. ஒரேநாளில் 31 பேர் பலியாகினர். இதில் 5 பச்சிளம் குழந்தைகள், 6 பெண்கள் அடக்கம்.
காசாவிலிருந்து இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் நோக்கி வீசப்படும் ராக்கெட்டுகளின் தாக்குதலில் இதுவரை சுமார் 50 பேர் படுகாயமடைந்திருப்பதாக கூறப்படுகிறது.
மும்முனைப் போர்
இஸ்ரேல்- பாலஸ்தீனம் இடையேயான தற்போதைய போர் களமானது மூன்று முனைகளில் நடைபெற்று வருகிறது. வான்வழித் தாக்குதல்கள் மூலம் உளவியல் ரீதியாக தாக்குவது, சமூக வலைதளங்கள் மூலமான கருத்து மோதல்கள் மற்றும் இணையதளங்களை முடக்கும் சைபர் யுத்தம்.
சைபர் யுத்தம்
கடந்த ஒருவார காலத்தில் மட்டும் இஸ்ரேலிய இணையதளங்களை முற்று முழுதாக முடக்கும் வகையில் மிகக் கடுமையான சைபர் யுத்தம் நடைபெற்று வருகிறது. சுமார் 44 மில்லியன் இணையதளங்கள் இதுவரையில் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இஸ்ரேல் அரசின் அனைத்து இணையதளங்களும் குறிவைக்கப்பட்டிருக்கிறது. இணையதளங்கள் முடக்கபப்டுவதும் பின்னர் சீரமைக்கப்படுவதும் அடுத்து முடக்குவதும் என மிகப் பெரும் சைபர் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.