புதுவை அரசு பள்ளிகளில் படிக்கும் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் +2 மாணவ, மாணவியரின் தேர்வு கட்டணத்தை அரசே ஏற்றுக்கொள்ளும் என்று அம்மாநில முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

புதுவை அரசின் சுகாதாரத் துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு வாராந்திர இரும்புச் சத்து மாத்திரைகள் வழங்கும் திட்ட துவக்க விழா கதிர்காமம் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் நடந்தது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புதுவை முதல்வர் ரங்கசாமி மாணவர்களுக்கு இரும்புச் சத்து மாத்திரைகளை வழங்கி திட்டத்தை துவக்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது, புதுவை அரசு பள்ளி மாணவ-மாணவியருக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. எஸ்.எஸ்.எல்.சி., +2 மாணவ-மாணவியரின் தேர்வு கட்டணத்தை அரசே செலுத்தும். பள்ளி மாணவர்களுக்கு இரும்புச் சத்து மாத்திரைகள் வழங்கும் திட்டம் தற்போது துவங்கப்பட்டுள்ளது.

இதனால் அரசுக்கு கூடுதலாக ரூ.50 லட்சம் செலவாகும். இத்திட்டத்தின் மூலம் 217 அரசு பள்ளிகளில் படிக்கும் 1 லட்சம் மாணவர்கள் பயன் பெறுவார்கள். பள்ளி மாணவர்களுக்கு காலையிலும், மாலையிலும் சிற்றுண்டி வழங்கப்படுகிறது. இதில் மாலையில் பால் வழங்கும் திட்டத்தை நிறுத்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம். மாலையில் பள்ளி முடிந்து மாணவர்கள் வீட்டுக்கு செல்வதால் பலர் பால் வாங்கி குடிக்காமலேயே சென்றுவிடுகின்றனர் என்றார்.