இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி எனப்படும் ஜிடிபி வளர்ச்சி கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு உயரும் என்று மூடி நிறுவனம் நிறுவனம் கணித்துள்ளது. கடந்த ஆண்டு இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 5.1 சதவீதமாக இருந்தது.

இதுதான் மிக மோசமான ஆண்டாகக் கருதப்பட்டது. ஆனால் இந்த நிலை 2013-ல் தொடராது என்றும், வளர்ச்சி விகிதம் 6.2 சதவீதமாக இருக்கும் என்றும் மூடி நிறுவன ஆய்வு தெரிவித்துள்ளது.

சர்வதேச அளவில் முதலீடுகளைத் தீர்மானிப்பதிலி மூடி நிறுவனத்தின் இந்த கணிப்புகள் பெரும் பங்கு வகிக்கின்றன. நிதியமைச்சர் ப சிதம்பரம் பட்ஜெட் உரையின்போது, இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6 சதவீதமாக இருக்கும் என்று குறிப்பிட்டிருந்தார். அதை விட அதிகமாக இருக்கும் என மூடி நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

வரும் ஆண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி இன்றும் சாதகமாக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் இந்த ஆய்வு தெரிவித்துள்ளது. “2014-ல் இந்த வளர்ச்சி 7 சதவீதத்தைக் கூட தாண்ட வாய்ப்புள்ளது. இந்தியாவைப் பொருத்தவரை சமீபத்திய ஆண்டுகளில் இது சாதனை அளவு எனலாம்,” என்கிறார் மூடி நிறுவனத்தின் மூத்த ஆய்வாளர் க்ளென் லெவின்.

ஆனால் இந்தியப் பொருளாதாரம் இரட்டை சதவீத வளர்ச்சி எனும் நிலைக்குச் செல்ல வேண்டுமானாலும் கொள்கை வகுப்பாளர்கள் பல விஷயங்களில் தெளிவாக இருக்க வேண்டும். அமைப்பு ரீதியான மாற்றங்கள் இல்லாமல் அந்த நிலையை நோக்கிச் செல்ல முயல்வது ஆபத்தில் முடியும் என எச்சரித்துள்ளது இந்த அறிக்கை.