பெண் ஊழியருக்கு செக்ஸ் தொல்லை கொடுத்ததாக வந்த புகாரை தொடர்ந்து, மும்பை செசன்சு கோர்ட்டு நீதிபதி பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

பெண் ஊழியர் புகார்

மும்பை செசன்சு கோர்ட்டில் போதை பொருள் வழக்குகள் விசாரணை சிறப்பு பிரிவில் நீதிபதியாக பதவி வகிப்பவர் எம்.டி.கெய்க்வாட். கடந்த சில தினங்களுக்கு முன் இந்த கோர்ட்டில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவர் ஐகோர்ட்டில் ஒரு புகார் மனு தாக்கல் செய்தார்.

அதில், ‘நீதிபதி எம்.டி.கெய்க்வாட் எனக்கு அடிக்கடி செக்ஸ் தொல்லை கொடுக்கிறார். இதனால் நான் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறி இருந்தார்.

விசாரணைக்கு உத்தரவு

மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட ஐகோர்ட்டு, குற்றம் சுமத்தப்பட்ட செசன்சு கோர்ட்டு நீதிபதி எம்.டி.கெய்க்வாட் மீது துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டது. முதற்கட்ட விசாரணையில், மனுதாரருக்கு அவர் செக்ஸ் தொந்தரவு கொடுத்தது உறுதிப்படுத்தப்பட வில்லை.

இதைத்தொடர்ந்து, மற்றொரு சிறப்பு கோர்ட்டு நீதிபதி துலங்கர் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. அவர் நடத்திய விசாரணையில், எம்.டி.கெய்க்வாட் மீதான குற்றச்சாட்டு உறுதியானது. இதை போல், மேலும் ஒரு பெண் ஊழியருக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்தது விசாரணையில் தெரியவந்தது. பின்னர் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

பணி இடைநீக்கம்

இந்நிலையில், அவரை பணி இடைநீக்கம் செய்து மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அவரால் பாலியல் தொல்லைக்கு ஆளான பெண் ஊழியர்களின் வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து இந்த முடிவை ஐகோர்ட்டு எடுத்ததாக தெரியவந்து உள்ளது. மேலும், பணி இடைநீக்கம் செய்யப்பட்ட நீதிபதி எம்.டி.கெய்க்வாட் மீது மும்பை கொலபா போலீசார் மானபங்க பிரிவின்கீழ் வழக்குபதிவு செய்து உள்ளனர்.