தமிழகத்தில் கடைப்பிடிக்கப்படும் 69 சதவீத இடஒதுக்கீடுக்கு எதிரான மனுக்கள் மீதான அடுத்த விசாரணையை வரும் ஏப்ரல் 6-ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.
இது தொடர்பான மனுக்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, சிவ கீர்த்தி சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் மூத்த வழக்குரைஞர் பி.பி.ராவ் ஆஜராகி, “இடஒதுக்கீடு விவகாரத்தில் ஆந்திர பிரதேச மாநில அரசு தொடுத்த வழக்கை, ஏழு நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. அந்த வழக்கில் உத்தரவு வரும்வரை இந்த மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளக் கூடாது’ என்றார்.
அப்போது, தமிழகத்தில் இடஒதுக்கீட்டால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் சார்பில் மூத்த வழக்குரைஞர் விஜயன் ஆஜராகி, “ஆந்திர மாநில அரசு தொடுத்துள்ள வழக்கு இந்திய அரசியல் சாசன அமர்வு 9-ஆவது அட்டவணைக்கு எதிரானதாகும். எனவே, தமிழக அரசின் இடஒதுக்கீடு சட்டத்துக்கும், அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் வழக்குக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. தமிழக அரசு கொண்டு வந்துள்ள சட்டத்தால் ஒவ்வொரு கல்வியாண்டின்போதும் இடஒதுக்கீட்டை காரணம் காட்டி மாணவர்களுக்கு சேர்க்கை பாதிக்கப்படும் நிலை ஏற்படுகிறது. இந்தப் பிரச்னைக்கு தீர்வு கண்டே ஆக வேண்டும்’ என்றார்.
இரு தரப்பு வாதங்களைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “இடஒதுக்கீடு தொடர்பான மனுக்கள், அரசியல் சாசன அமர்வு விசாரித்து வரும் ஆந்திர அரசின் வழக்கு விவகாரத்துடன் தொடர்புடையதா? அந்த அரசியல் சாசன அமர்வின் வரம்புக்குள் தமிழகத்தில் இடஒதுக்கீட்டால் பாதிக்கப்படுவோர் முன்வைக்கும் கோரிக்கை வருகிறதா? என்பது பற்றி இரு தரப்பும் விளக்க வேண்டும். இதற்கு ஏதுவாக மனுக்கள் மீதான அடுத்த விசாரணை வரும் ஏப்ரல் 6-ஆம் தேதிவரை ஒத்திவைக்கப்படுகிறது’ என்றனர்.