சென்னையில் இயக்கப்படும் ஆட்டோக்களில் 4 மாதங்களுக்குள் ஜி.பி.ஆர்.எஸ். கருவிகள் பொருத்தப்படும் என்று ஐகோர்ட்டில் தமிழக அரசு உத்தரவாதம் அளித்துள்ளது.
கோர்ட்டு அவமதிப்பு
சென்னை ஐகோர்ட்டில், கோவையை சேர்ந்த நுகர்வோர் குரல் என்ற அமைப்பின் செயலாளர் லோகு என்பவர் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ‘பெட்ரோல், டீசல் விலைக்கு ஏற்ப ஆட்டோ கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும். ஆட்டோவில் அதிக கட்டணம் வசூலித்தால் புகார் தெரிவிக்க வசதியாக புகார் எண்ணை பயணிகள் இருக்கைக்கு முன்பு எழுதியிருக்க வேண்டும். கட்டண விவரப் பட்டியல் ஆட்டோவில் இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 8 நிபந்தனைகளை இந்த ஐகோர்ட்டு பிறப்பித்தது. ஆனால், இந்த நிபந்தனைகள் எதையும் அரசு நடைமுறைப்படுத்தவில்லை’ என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு கடந்த மாதம் விசாரணைக்கு வந்தபோது, ‘நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிகமாக பயணிகளிடம் வசூலிக்கும் நபர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்படுகிறது. ஏன் இந்த அபராதத் தொகையை ரூ.1,500ஆக உயர்த்தக்கூடாது?’ என்று ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது.
குறுஞ்செய்தி
மேலும், ஆட்டோ கட்டணம் தொடர்பான புகாரை பெற்றுக் கொண்டதற்கும், அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் புகார்தாரர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவிக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, கூடுதல் அட்வகேட் ஜெனரல் மணிசங்கர் ஆஜராகி, ‘புகார்களை அனுப்பும் பொதுமக்களுக்கு, அந்த புகார் பெறப்பட்டது குறித்தும், அந்த புகாரின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் குறுஞ்செய்தி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆட்டோக்களிலும் ஜி.பி.ஆர்.எஸ். கருவிகளை பொருத்துவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான டெண்டர் ‘எல்காட்’ நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னையில் இயக்கப்படும் ஆட்டோக்களில் 3 அல்லது 4 மாதங்களில் ஜி.பி.ஆர்.எஸ். கருவிகள் பொருத்தப்படும். அதன்பின்னர் தமிழகம் முழுதும் இந்த நடைமுறை விரிவுபடுத்தப்படும்’ என்று கூறினார்.
அபராதம் உயர்த்தப்படும்
மேலும், ‘விதி மீறல் ஆட்டோ டிரைவர்களுக்கு அதிக அபராதம் விதிப்பது தொடர்பாக மத்திய அரசு, மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் கொண்டு வருகிறது. இந்த சட்டத்திருத்தம் அமலுக்கு வந்ததும், அபராத தொகையை ரூ.1,500 ஆக உயர்த்துவது குறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்’ என்றும் கூடுதல் அட்வகேட் ஜெனரல் கூறினார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை வருகிற டிசம்பர் 6-ந்தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்கள்.