ராணுவத்தில் பதவி உயர்வைத் தடுக்க முன்னாள் ராணுவ தலைமை தளபதி வி.கே.சிங் சூழ்ச்சி செய்ததாக தற்போதைய ராணுவத் தலைமைத் தளபதி தல்பீர் சிங் உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.

ராணுவத்தில் லெப்டினன்ட் ஜெனரலாக பணியாற்றி ஓய்வு பெற்ற ரவிதஸ்தனே என்பவர் உச்சநீதிமன்றத்தில் முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் கடந்த 2012ல் தனக்கு கிடைக்க வேண்டிய தலைமை கமாண்டர் பதவிக்கு அப்போதைய ராணுவ தளபதி(இன்றைய மத்திய இணையமைச்சருமான) வி.கே.சிங் தனக்கு விருப்பமானவரை நியமித்ததாகக் கூறியிருந்தார்.
army_20
இது குறித்து ராணுவத் தலைமைத் தளபதி தல்பீர் சிங் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து தல்பீர் சிங் தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில், கடந்த 2012ம் ஆண்டு அப்போதைய ராணுவத் தலைமைத் தளபதி வி.கே. சிங் தனக்கு பிராந்திய தலைமை கமாண்டர் பதவி கிடைக்காமல் செய்ய போலியான குற்றச்சாட்டுகள் கூறி பதவி உயர்வை நிறுத்தி வைத்ததாகவும், பின்னர் விசாரணையில் போலியான குற்றச்சாட்டு என்பதால் பதவி உயர்வு அளிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

முன்னாள் ராணுவ தலைமைத் தளபதியும், இன்றைய மத்திய இணையமைச்சருமான வி.கே. சிங் மீது தல்பீர் சிங் சுஹாக் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு மத்திய அரசு வட்டாரங்களில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.