மருத்துவ கல்லூரியில் சீட் தருவதாக மாணவர்களிடம் வசூலித்து மோசடி செய்த ரூ69 கோடியை திருப்பித் தருவதாக திடீரென எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனங்களின் தலைவர் பச்சமுத்து சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமக்கு சொந்தமான மருத்துவ கல்லூரிகளில் சீட் தருவதாக 112 மாணவர்களிடம் ரூ75 கோடி வசூலித்து இடம்தராமல் ஏமாற்றினார் பச்சமுத்து என்பது புகார். இப்புகாரின் அடிப்படையில் கடந்த வெள்ளிக்கிழமை பச்சமுத்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Image result for பச்சமுத்து

பச்சமுத்துவின் ஜாமீன் மனு மீது சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில் மாயமான மதன் குறித்தும் மோசடி பணம் குறித்தும் பச்சமுத்துவை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி போலீஸ் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இம்மனுக்கள் மீது இன்று விசாரணை நடைபெற உள்ளது. இதனிடையே புதிய திருப்பமாக மாணவர்களிடம் வசூலித்த ரூ69 கோடியை திருப்பித் தர பச்சமுத்து ஒப்புதல் தெரிவித்துள்ளதாகவும் பணத்தை திருப்பித் தருவதால் அவரை விடுதலை செய்ய வேண்டும் என்றும் அவர் சார்பில் மகன் ரவிபச்சமுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. விசாரணையின் முடிவில் பச்சமுத்துவின் மனு மீது பதிலளிக்குமாறு போலீசார், மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.