தகவல் தொழில்நுட்பம்இந்தியாவில் அனைத்து அவசர அழைப்புகளுக்கும் என்ற எண்ணை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
தற்போது இந்தியாவில் பல்வேறு துறைகளுக்கும் வெவ்வேறு எண்கள் அவசர அழைப்புகளுக்காக செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், நாட்டின் அனைத்து அவசர கால உதவி அழைப்புகளுக்கும் ஒரே எண்ணை அறிவிக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமான ட்ராய் தனது அறிக்கையில் பரிந்துரை செய்திருந்தது.
இந்நிலையில் தற்போது 112 என்ற எண்ணை  இந்தியாவின் தேசிய அவசர எண்ணாக கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட ‘நிர்பய் ஏவுகணை’யை இந்தியா நேற்று வெற்றிகரமாக பரிசோதனை செய்தது.

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறையின் சார்பில், முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நிர்பய் ஏவுகணை உருவாக்கப்பட்டது.

அணு ஆயுதங்களைச் சுமந்துகொண்டு, நிலத்தில் இருந்து 1000 கிலோ மீட்டருக்கும் அதிகமான தூரத்தில் உள்ள இலக்கைத் தாக்கவல்ல இந்த ஏவுகணை, ஒடிஸாவின் பாலாசோரில் இருந்து வெள்ளிக்கிழமை காலை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.

NIRBHAY_2159776fநிலம், போர் விமானம், கப்பல், நீர்மூழ்கிக் கப்பல் ஆகியவற்றில் இருந்து தாக்கக்கூடிய வகையில் நிர்பய் ஏவுகணைகள் தொடர்ச்சியாக உருவாக்கப்பட்டு வருகிறது. இவற்றில் நிலத்தில் இருந்து தாக்கக் கூடிய வகையில் இரண்டாவது முறையாக சோதனை செய்யப்பட்டது. இந்த வகையிலான ஏவுகணைகள் ஒலியின் வேகத்தைவிட சற்று குறைவான வேகத்தில், 1,500 கிலோ மீட்டர் தொலைவு வரை பாய்ந்து சென்று தாக்கக் கூடியவையாகும்.

முன்னதாக நிர்பய் சோதனை முயற்சி கடந்த 2013-ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடத்தப்பட்டது. ஆனால், அப்போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அந்த முயற்சி பாதியிலேயே நிறுத்தப்பட்டு விட்டது குறிப்பிடத்தக்கது.


இந்த விளம்பரப் பலகையில் பொருத்தப்பட்டுள்ள ஒரு ”உறிஞ்சி வடிகட்டி”, காற்றின் ஈரப்பதனில் உள்ள நீரை உறிஞ்சி எடுத்து சுத்தமான குடிநீராக கொடுக்கிறது.

 Water from Advertisement board

”யூடெக்” என்று அழைக்கப்படுகின்ற லிமா பல்கலைக்கழகத்தின் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் ஆய்வாளர்கள், மாயோ பெரு டிராஃப்ட் எஃப் சி பி என்னும் விளம்பர நிறுவனத்துடன் சேர்ந்து இந்த முயற்சியை செய்துள்ளனர்.

தமது கற்பனையை யதார்த்தமாக்கும் திட்டம் என்று இதனை வர்ணித்துள்ள யூடெக் நிறுவனம், தமது மக்களின் தண்ணீர் தேவையை, தொழில்நுட்பத்தின் மூலம் தீர்த்து வைப்பதே தமது நோக்கம் என்று கூறுகிறது.

ஒரு நாளைக்கு 96 லீட்டர்கள் என்ற கணக்கில் இதுவரை 9 000 லீட்டர்கள் குடிநீரை இந்த தகரம் பொருத்தப்பட்ட விளம்பரப் பலகை, காற்றில் இருந்து வடித்துக் கொடுத்திருப்பதாக அந்த நிறுவனம் கூறுகிறது.

நகரத்துக்கு தெற்கே புஜாமா என்னும், கிட்டத்தட்ட பாலைவனமான ஒரு கிராமத்தில் இந்த விளம்பரப் பலகை அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் கிராம மக்களுக்கு குடிநீர் கிடைப்பது மிகவும் சிரமமாக இருக்கிறது.

அந்தப் பகுதியில் மழையே இல்லாமல் கடுமையான வெப்பம் மிகுந்த காலநிலை காணப்படுகின்ற போதிலும், அங்கு காற்றில் ஈரப்பதன் 98 வீதமாக இருப்பதாக யூடெக் கூறுகிறது.

மிகவும் சுலபமாக அந்த பலகை நீரை உறிஞ்சி வடிகட்டி குடிநீராகக் கொடுப்பதாக அந்த பல்கலைக்கழக பேச்சாளரான ஜெசிக்கா ருவஸ் கூறுகிறார்.

”அந்தப் பகுதியில் உள்ள கடலில் நிறைய நீர் இருந்தும் அதனை குடிநீராக மாற்றுவதற்கான முறைமையும் மிகவும் செலவு மிக்கது. ஆகவே எதிர்காலத்தில் இந்தத் திட்டத்தால் நிறைய பலன் கிடைக்கலாம்” என்றும் அவர் கூறுகிறார்.

இந்த பலகையில் உள்ள 5 பொறிகள் அடங்கிய ஒரு இயந்திரம், காற்றில் இருந்து நீராவியை பிரித்து எடுத்து திரவமாக மாற்றுகிறது; அந்த நீர் ஒரு தாங்கியில் நிரம்ப, அதனை எவரும் ஒரு குளாய் மூலம் பிடித்துக்கொள்ளலாம்.

இந்த ஒரு அலகை பொருத்துவதற்கு1200 டாலர்கள் செலவாகும்.

எதிர்காலத்தில் இந்த பொறி மிகவும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று இந்த திட்டத்தில் சம்பந்தப்பட்ட அனைவரும் நம்புகிறார்கள்.


நாடாளுமன்றத்தின் மக்களவையில் இன்று மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் பொது நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து உரையாற்றினார்.

இந்தியாவின் 82வது பொது நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசிய சிதம்பரம், சர்வதேச பொருளாதார வளர்ச்சி சரிவு நிலையில் உள்ளது. இந்தியாவின் ஏற்றுமதி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்திய பொருளாதாரத்தை வளர்ச்சியில் கொண்டு வருவதே மத்திய அரசின் தாரக மந்திரமாக உள்ளது. உயர்ந்த பொருளாதார வளர்ச்சியை அடைவது தற்போது கடினமான பணியாக உள்ளது என்று கூறினார்.

பட்ஜட் விவரங்கள் :

• மத்திய விற்பனை வரி இழப்பீடாக மாநில அரசுகளுக்கு ரூ.9 ஆயிரம் கோடி வழஙகப்படும்.

• எலக்ட்ரானிக்ஸ் சிப் உற்பத்தி நிறுவனங்களுக்கு சுங்க வரி விலக்கு.

• 2025ஆம் ஆண்டு இந்தியா ரூ.250 கோடி பொருளாதார நாடாக உருவாகும்.

• 2017ஆம் ஆண்டு இந்தியா உலகளவில் 7வது மிகப்பெரிய பொருளாதார நாடாக முன்னேறும்.

வேளாண் விவசாய நிலங்கள் விற்பனையில் வரி விலக்கு.

பயணிகள் எடுத்துச் செல்லும் தங்கத்துக்கு செலுத்த வேண்டிய வரிச் சலுகை ஆண்களுக்கு ரூ.50 ஆயிரமும், பெண்களுக்கு ரூ.1 லட்சமாக உயர்த்தப்படுகிறது.

ரூ.18,000 கோடிக்கு புதிய வரிகள்

• 800 சிசி திறனுக்கு மேல் உள்ள வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான வரி அதிகரிப்பு

• வெளிநாடுகளில் இருந்து வாங்கப்படும் சொகுசு வாகனங்களுக்கான வரி விதிப்பு 75%ல் இருந்து 100% ஆக உயர்வு.

• திரைப்படத் துறைக்கு சேவை வரியில் இருந்து விலக்கு

• குளிர் சாதன வசதியுடன் கூடிய உணவகங்களுக்கு சேவை வரி

• நேரடி வரி விதிப்பில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் மூலமாக ரூ.13,300 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும்.

• மறைமுக வரி விதிப்பில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் மூலமாக ரூ.4,700 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும்.

• இதன் மூலம் ரூ.18,000 ஆயிரம் கோடிக்கு புதிய வரிகள் விதிக்கப்பட்டுள்ளன.

செல்போன் வரி உயர்வு

• ஆடம்பர வாகன இறக்குமதி வரி உயர்வு

• சிகரெட்டுகளுக்கு 18 சதவீதம் வரி உயர்வு

• கப்பல் கட்டும் தொழிலுக்கு உற்பத்தி வரி விலக்கு

• எஸ்யுவி வகை கார்களுக்கு உற்பத்தி வரி அதிகரிப்பு

• வெள்ளி உற்பத்திக்கு 4% உற்பத்தி வரி

• செல்போன்களுக்கான உற்பத்தி வரியில் மாற்றமில்லை.

• ரூ.2000க்கு கீழ் உள்ள செல்போன்களுக்கு வரியில் மாற்றமில்லை.

• ரூ.2 ஆயிரத்துக்கும் மேல் விலையுள்ள மொபைல்போன்களுக்கு 6% வரி

• வருமான வரி உச்ச வரம்பு ரூ.2 லட்சமாகவே நீடிக்கிறது.

• ரூ.1 கோடி வருமானம் உள்ளவர்களுக்கு கூடுதல் வரியும், ரூ.1 கோடிக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு 10% கூடுதல் வரியும் விதிக்கப்படும்.

• வரி ஏய்வு தடுப்புச் சட்டம் ஏப்ரல் 2016 முதல் அமலுக்கு வரும்.

• விவசாயப் பொருட்களுக்கு பண்டக சாலையில் வைப்பதற்கான வரி விலக்கு

• இறக்குமதி செய்யப்பட்ட செட்-டாப் பாக்ஸ்களுக்கு வரி 5% முதல் 10% ஆக உயர்வு

• 50 லட்சத்துக்கு மேல் அசையா சொத்துக்கள் விற்பனையில் 1% வரி பிடித்தம்

• கலால், சுங்க வரிகளில் மாற்றமில்லை.

• தோல் தொழில் நிறுவன இயந்திரங்களுக்கு வரி குறைப்பு.

ரூ.5 லட்சம் வரை ஊதியம் பெறுவோருக்கு

• ரூ.1 கோடிக்கு மேல் வருமானம் பெறுபவர்களுக்கான 10% கூடுதல் வரி வசூல் ஒரு ஆண்டுக்கு மட்டுமே.

• பணக்காரர்கள் கூடுதலாக வரி செலுத்த வேண்டும் என்ற அடிப்படையில் இத்திட்டம்

• ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை ஊதியம் பெருவோரின் வரியில் ரூ.2000 வரை விலக்கு அளிக்கப்படும்.

• காப்பீட்டுக்கான மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் நிறைவேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 தனிநபர் வருமான வரி உச்சவரம்பில் மாற்றமில்லை

• குழந்தைகளுக்கான தேசிய நல நிதி உருவாக்கப்படும்.

• உற்பத்தி நிறுவனங்களுக்கு உற்பத்தி ஊக்கத் தொகை 15 சதவிகிதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

• வரிக் கொள்கையை மறு ஆய்வு செய்ய புதிய ஆணையம்.

• தனி நபர் வருமான வரி உச்ச வரம்பில் மாற்றமில்லை என்று சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

• ரூ.1 கோடிக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு 10% கூடுதல் வரி

• வருவாய் பற்றாக்குறை வரும் நிதியாண்டில் 3.4-3.8 சதவீதம்.

• நேரடி வரிகளிலும் மாற்றமில்லை.

•  கல்விக்கான கூடுதல் வரி விதிப்பு தொடரும்.

பாதுகாப்புத் துறை

பாதுகாப்புத் துறைக்கு ரூ.2.03 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

• அணுமின் சக்தி, அறிவியல் தொழில்நுட்பத் துறைக்கு கூடுதல் நிதி.

• இயற்கை எரிவாயு விலை நிர்ணயிப்பில் புதிய கொள்கை.

• எப்எம் ரேடியோ சேவைக்கு 839 உரிமங்கள் ஏலம் மூலம் வழங்கப்படும்.

•அஞ்சல் துறை நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் மேம்படுத்தப்படும்.

• அஞ்சல் துறை திட்டத்துக்கு கூடுதலாக ரூ.530 கோடி ஒதுக்கீடு.

• கழிவு பொருட்களில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.

• இடிஎப் திட்டங்களில் ஓய்வூதியை நிதியை முதலீடு செய்ய அனுமதி

• 10 லட்சம் மக்கள் வசதிக்கும் நகரங்களில் எல்ஐசி அலுவலகம்.

• வங்கிகள் தரும் விண்ணப்பங்களே எல்ஐசிக்கும் பொருந்தும்.

• செபிக்கு கூடுதல் அதிகாரம்.

• அனைத்து பொதுத்துறை வங்கிகளிலும் ஏடிஎம் வசதி. 2014ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் அமைக்கப்படும்.

• நுண் கடன் திட்டங்களை விநியோகிக்க வங்கி தொடர்பாளர்களுக்கு அனுமதி

• பாறை எரிவாயு அகழ்வாய்வுக்கு புதிய கொள்கை.

• கல்விக்கும், வேலை வாய்ப்புக்கும் வரும் நிதியாண்டில் முக்கியத்துவம் அளிக்கப்படும்.

•. கல்வித் துறை மேம்பாட்டுக்கு ரூ.65,867 கோடி ஒதுக்கீடு.

பெண்களுக்கு என  தனி வங்கி

• பெண்களுக்கென முதல் தனி வங்கி. அந்த வங்கியில் முதற் கட்டமாக ரூ.1000 கோடி முதலீடு

வரும் அக்டோபர் மாதத்துக்குள் பெண்களுக்கான தனி வங்கி துவக்கப்படும்.

• ஊரக தேசிய வீட்டு வசதி திட்டத்துக்கு ரூ.2,000 கோடி ஒதுக்கீடு

• உணவுப் பாதுகாப்புத் திட்ட மசோதா, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

• உணவுப் பாதுகாப்புத் திட்டத்துக்கு கூடுதலாக ரூ.1000 கோடி ஒதுக்கீடு.

• குடிநீரை சுத்தப்படுத்தும் திட்டத்துக்கு ரூ.1,400 கோடி ஒதுக்கீடு.

இந்தியாவில் நிலக்கரி இறக்குமதி அதிகரிப்பு

நிலக்கரி இறக்குமதி செய்வது இந்தியாவில் அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக அமைச்சத் கூறுகிறார்.

• நிலக்கரி இறக்குமரி கவலை அளித்து வருகிறது.

• ஜவுளித் துறைக்கு ரூ.2400 கோடி ஒதுக்கீடு.

• ஜவுளி மேம்பாட்டுத் துறைக்கு ரூ.1.51 லட்சம் கோடி ஒதுக்கீடு

• ராஞ்சியில் இந்திய உயிரி தொழில்நுட்ப மையம்.

• தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்துக்கு ரூ.33,000 கோடி ஒதுக்கீடு.

• பொது வங்கிகளுக்கு ரூ.14,000 கோடி ஒதுக்கீடு

தூத்துக்குடியில் புதிய துறைமுகம்

தூத்துக்குடியில் புதிய துறைமுகம் உருவாக்கப்படும் என்று சிதம்பரம் அறிவித்துள்ளார்.

• குஜராத், மகாராஷ்டிராவில் இரு தொழில் நகரங்கள் அமைக்கப்படும்.

• ரூ.1650 கோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒதுக்கப்படும்.

• பயோடெக்னாலஜி கூடங்கள் சட்டீஸ்கரில் அமைக்கப்படும்.

• 6 மருத்துவக் கல்லூரிகள் துவங்க ரூ.1650 கோடி ஒதுக்கீடு

• ரூ.25 லட்சம் வரையிலான வீட்டுக்கடனுக்கு ஒரு லட்சம் வரிச் சலுகை

• தூத்துக்குடியில் புதிய துறைமுகம். துறைமுக விரிவாக்கத்திற்கு ரூ.7500 கோடி ஒதுக்கீடு

• விலைவாசி உயர்வுக்கு ஏற்ப லாபம் தரும் கடன் பத்திரங்கள் அறிமுகப்படுத்தப்படும்.

கல்வித் துறை

இந்தியாவில் கல்வித் துறைக்காக கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

• வரும் ஆண்டில் கல்விக்காக ரூ.65,867 கோடி ஒதுக்குடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு கல்விக்காக ஒதுக்கப்பட்ட நிதியை விட 17% அதிகமாகும்.

• பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்துக்கு ரூ.13,215 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

• அனைவருக்கும் கல்வி திட்டத்தை திறம்பட செயல்படுத்த ரூ.27,258 கோடி ஒதுக்கீடு.


சுகாதாரத் துறை

சித்தா, ஆயுர்வேதத்துக்கு ரூ.1,069 கோடி ஒதுக்கீடு

தேசிய சுகாதார இயக்கத்தில் ஆயுர்வேதம், சித்தாவை செயல்படுத்த ரூ.1,069 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

• சுகாதாரத் துறைக்கு ரூ.37,330 கோடி ஒதுக்கீடு.

• ஊரகப் பகுதிகளின் மேம்பாட்டுக்கு ரூ.80,200 கோடி ஒதுக்கீடு.

• குறுகிய கால பயிர் கடன்களுக்கு வழங்கப்பட்டு வந்த மானியம் தொடரும்.

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு

•  இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரிப்பது முக்கிய குறிக்கோளாக எடுத்து செயல்படுத்தப்படும்.

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கவும், குழந்தைகள் நலனுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று ப. சிதம்பரம் அறிவித்துள்ளார்.

• மனித வள மேம்பாடுக்காக ரூ.65,867 கோடி ஒதுக்கீடு.

• சிறுபான்மையினர் நலனை மேம்படுத்த ரூ.3,511 கோடி ஒதுக்கீடு

•. பழங்குடினியினர் நலனுக்கு ரூ.24,598 கோடி ஒதுக்கீடு.

• தாழ்த்தப்பட்டோர் நல திட்டங்களுக்கு ரூ.41,561 கோடி ஒதுக்கீடு

•. குழந்தைகள் நலனை மேம்படுத்த ரூ.97,134 கோடி ஒதுக்கீடு

தாழ்த்தப்பட்டோர் நலனுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை வேறு பணிகளுக்குப் பயன்படுத்தக் கூடாது.

• இந்தியாவின் உணவு பொருள் பணவீக்கம் கவலை அளிப்பதாக உள்ளது.

•வெளிநாட்டில் இருந்து வரும் முதலீடுகள் வரவேற்கப்படுகின்றன. சர்வதேச பொருளாதார வளர்ச்சி பாதிப்பால், 2010ஆம் ஆண்டுக்குப் பிறகு பொருளாதார வளர்ச்சி மந்தநிலையில் உள்ளது.

•பொருளாதாரம் தொடர்ந்து சவாலானப் பணியாகவே உள்ளது. 11வது ஐந்தாண்டு திட்டத்தில் 8 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளோம்.

•இந்தியாவை விட சீனா மற்றும் இந்தோனேசிய நாடுகள் வளர்ச்சிப் பாதையில் செல்கின்றன.

• 2012-13ஆம் ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி 5.5 சதவீதமாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.

மன்மோகன்சிங் பாராட்டு

மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வரவேற்கத்தக்க சிறப்பான பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறார் என்று பிரதமர் மன்மோகன்சிங் பாராட்டியுள்ளார்.

பட்ஜெட் குறித்து பிரதமர் மன்மோகன்சிங் கூறுகையில், நாட்டின் பொருளாதாரம் சவால்களை எதிர்கொண்டிருக்கிறது. இதை சமாளிக்கும் வகையில் பட்ஜெட் அமைந்திருக்கிறது.

நாட்டின் வளர்ச்சியை இலக்காகக் கொண்டு இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அதிகளவிலான முதலீடுகளை ஈர்க்கும் வகையிலான பட்ஜெட்டாகவும் அமைந்திருக்கிறது.

பொருளாதார தேக்கத்தை எதிர்கொண்டிருக்கும் நிலையில் சிறப்பானதாக பட்ஜெட் அமைந்திருக்கிறது. 12-வது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் 10 மில்லியன் வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டிய தேவை நமக்கிருக்கிறது.

இதற்காக 8% மொத்த உள்நாட்டு உற்பத்தி இலக்கை எட்ட வேண்டும் என்றார் அவர்.


விண்டோஸ் கணினி இயக்க மென்பொருள் வரிசையின் புதிய தலைமுறை வரவான விண்டோஸ் 8ஐ மைக்ரொஸாஃப்ட் இன்று வெளியிடுகிறது.

தவிர முதல் தடவையாக தாமாகவே உற்பத்தி செய்துள்ள டேப்லட் ரக கணினி ஒன்றையும் இன்று மைக்ரோஸாஃப்ட் வெளியிடுகிறது. இதற்கு சர்ஃபேஸ் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

கணினி மென்பொருள் உலகின் மிகப் பெரிய நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோஸாஃப்டுக்கு இது வாழ்வா சாவா என்பது மாதிரியான ஒரு தருணம் ஆகும்.

நவீன கைத்தொலைபேசிகளே கணினிகளாக மாறிவிட்ட நிலையில் மைக்ரோஸாஃப்ட் நிறுவனத்தால் முன்னைப்போல மென்பொருள் உலகில் கோலோச்ச முடியவில்லை.

ஆப்பிள், கூகுள் ஆண்ட்ராய்டு போன்றவற்றுடன் போட்டிபோட விண்டோஸ் திணறிவருகிறது.

மைக்ரோஸாஃப்டின் சறுக்கலை தடுக்க அவர்களுக்கு கிடைத்திருக்கும் கடைசி சந்தர்ப்பம் இது என்று கூறப்படுகிறது.

தொடுதிரைக் கணினிகள்

சர்ஃபேஸ் டேப்லட் கணினி

நவீன கைத்தொலைபேசிகளும் டேப்லட் கணினிகளிலும் தொடுதிரை என்பது எப்படி பிரபலமாகிவிட்டதோ அதேபோல மேஜையில் வைத்து வெலைபார்க்கும் கணினிகள் மடிக் கணினிகள் ஆகியவற்றிலும் தொடுதிரை பிரபலம் அடையும் என்று நம்பி மைக்ரோஸாஃப்ட் இந்த பரீட்சையில் இறங்கியுள்ளது.

தொடுதிரை அம்சத்தோடு வரக்கூடிய புதிய தலைமுறைக் கணினிகளுக்காக வடிவமைக்கப்பட்டது விண்டோஸ் 8 ஆகும்.

ஆனால் எப்போதும்போல கீபோர்ட் மவுஸ் பயன்படுத்தியும் இவற்றைப் பயன்படுத்த முடியும்.

தவிர டேப்லட், ஸ்மார்ட்ஃபோன் போன்ற சிறிய கணினிகளிலும் இவற்றைப் பயன்படுத்திவிட முடியும்.

வடிவமைப்பில் மாற்றங்கள்

விண்டோஸ் மென்பொருளின் தோற்றத்தில் இம்முறை பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

விண்டோஸின் முந்தைய வடிவங்கள் அனைத்திலும் காணப்பட்ட ஸ்டார்ட் பொத்தான் விண்டோஸ் 8ல் கிடையாது.

மைக்ரோஸாஃப்ட் நிறுவனத்தைப் பொறுத்தவரை இந்த மென்பொருள் வெற்றிபெற்றே ஆகவேண்டும்.

தனி நபர் கணினி என்று வரும்போது சந்தையில் மிகப் பெரிய பங்கை மைக்ரோஸாப்ட் வைத்திருக்கிறது.

சரிவில் மைக்ரொஸாஃப்ட்

ஆனால் அவ்வகைக் கணினிகளை மக்கள் பயன்படுத்துவதென்பது மிக வேகமாக குறைந்துகொண்டு வருகிறது. ஏனென்றால் இன்றைக்கு கணினியில் செய்யும் அத்தனை வேலையையும் கைத்தொலைபேசியில் செய்துவிடலாம்.

ஆப்பிள் நிறுவனத்தின் ஐஃபோன் ஐபேட், கூகுளின் அண்ட்ராய்ட் மென்பொருளில் இயங்கும் ஏராளமான கைத்தொலைபேசிகள், டேப்லட்கள் போன்றவைதான் இன்று சந்தையில் ஆதிக்கம் செலுத்துகின்றன.

கணினி இயக்க மென்பொருளில் 70 சதவீதமாக இருந்த மைக்ரோஸாப்டின் சந்தைப் பங்கு நான்கே வருடங்களில் 30 சதவீதமாகக் குறைந்துவிட்டுள்ளது.

ஆனால் இந்த புதிய விண்டோஸ் வந்து அந்தச் சரிவை சரிகட்டிவிடும் என்று மைக்ரோஸாஃப்டின் தலைமை நிறைவேற்று அதிகாரி ஸ்டீவ் பால்மர் கூறுகிறார்.

விஷப் பரீட்சை?

மைக்ரோஸாஃப் இறங்கியுள்ள இந்தப் பரீட்சையில் ஆபத்துகளும் இல்லாமல் இல்லை. கணினிகள், லேப்டாப்புகள் போன்றவற்றில் தொடுதிரை இருப்பதை நுகர்வோர் விரும்பாமல் போகவும் வாய்ப்பு உண்டு.

மேலும் முந்தைய விண்டோஸ் வடிவங்களுக்கு பெருமளவில் மாறுபட்டதாக வந்திருக்கின்ற இந்த வடிவத்தைக் கண்டு, பலகாலமாக விண்டோஸ் பயன்படுத்திவருபவர்கள் குழம்பிப்போய் விண்டோஸிலிருந்து விலகிச் செல்லக்கூடிய ஆபத்தும் இருக்கத்தான் செய்கிறது.


இந்தியாவின் 100-வது ராக்கெட்டான ‘பி.எஸ்.எல்.வி.-சி21’ ராக்கெட் தனது வானவெளி பயணத்தை நாளை (செப்.9) காலை 9.51 மணிக்கு மேற்கொள்கிறது. இந்த காட்சியை,  ‘இஸ்ரோ’ விஞ்ஞானிகளுடன் சேர்ந்து பிரதமர் மன்மோகன்சிங்கும் பார்வையிட இருக்கிறார். இந்த ராக்கெட்டில் 2 செயற்கை கோள்கள் தவிர 6 மோட்டார்களும் இடம் பெற்று உள்ளன.

இந்திய வானவெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) 1975-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி தனது முதல் வானவெளி பயணத்தை தொடங்கியது. அன்று, இஸ்ரோ நிறுவனம் தயாரித்த சொந்த செயற்கை கோளான ஆர்யபட்டாவை, ரஷியாவின் ராக்கெட்டில் வைத்து விண்ணில் செலுத்தியது. அதன் பின்னர் பல்வேறு ஆராய்ச்சிகளை தொடர்ந்து நடத்தி 62 செயற்கை கோள்களையும், பிற நாடுகளின் செயற்கை கோள்களை தாங்கிச்செல்லும் 37 ராக்கெட்டுகளையும் ‘இஸ்ரோ’ விண்ணில் செலுத்தி உள்ளது.

நாளை  வானவெளியில் பாய இருக்கும் ‘பி.எஸ்.எல்.வி.-சி21’ ராக்கெட் இந்தியாவின் 100-வது ராக்கெட் ஆகும். இது, பிரான்ஸ் நாட்டின் 712 கிலோ எடையுள்ள ‘ஸ்பாட்-6’ என்கிற செயற்கை கோளையும், 15 கிலோ எடையுள்ள ஜப்பான் நாட்டின் செயற்கை கோளையும் ஏந்திச் செல்ல இருக்கிறது. ஆகவே இது முழுக்க, முழுக்க வர்த்தக ரீதியான வானவெளி பயணம் ஆகும்.

இந்த ராக்கெட்டின் 51 மணி நேர ‘கவுண்ட் டவுன்’, இந்திய ராக்கெட் ஏவுதளங்களில் ஒன்றான ஸ்ரீஹரிகோட்டாவில், நேற்று (செப்.7) காலை 6.51 மணிக்கு தொடங்குகியது.

இந்த ‘கவுண்ட் டவுன்’ காலத்தில் ராக்கெட்டுக்கான திட மற்றும் திரவ எரிபொருள் நிரப்பும் பணிகள் நடைபெறும் என்று ‘இஸ்ரோ’ நிறுவனம் தெரிவித்தது. 9-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.51 மணிக்கு ராக்கெட் விண்ணில் சீறிப் பாயும்.

இந்த ராக்கெட்டில் 2 செயற்கை கோள்கள் தவிர 6 மோட்டார்களும் இடம் பெற்று உள்ளன. இந்த 100-வது ராக்கெட் தனது வானவெளி பயணத்தை மேற்கொள்ளும் காட்சியை, ‘இஸ்ரோ’ விஞ்ஞானிகளுடன் சேர்ந்து பிரதமர் மன்மோகன்சிங்கும் பார்வையிட இருக்கிறார். (டிஎன்எஸ்)


இந்தியா அணு ஆயுத நாடானது சரியானதே. இந்தியாவைச் சுற்றியுள்ள பெரிய நாடுகள் அனைத்தும் அணு ஆயுதத்தை வைத்திருந்தபோது, இந்தியாவும் அதை உருவாக்க வேண்டியது அவசியம் ஆயிற்று. இதன்மூலம் தான் தெற்காசிய மண்டலத்தில் அதிகாரச் சமநிலையை உருவாக்க முடிந்தது என்று முன்னாள் ஜனாதிபதிபதி அப்துல் கலாம் கூறினார்.

இந்தியாவின் ஏவுகணை, ராக்கெட் மற்றும் அணு ஆயுதத் திட்டத்தை முன்னெடுத்துச் சென்ற விஞ்ஞானியான கலாம் 33-வது ஆசிய பசிபிக் ஒருங்கிணைந்த ஊரக மேம்பாடு தொடர்பான கருத்தரங்கில் பங்கேற்க வங்கதேசத் தலைநகர் டாக்கா வந்தார்.

அங்கு பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டி:

கேள்வி: இப்போது தெற்கு ஆசிய மண்டலத்தில் அமைதி ஏற்பட வேண்டும் என வலியுறுத்தி வரும் நீங்கள், இந்தியாவின் அணு ஆயுதம் மற்றும் தொலை தூர ஏவுகணைத் திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதில் முக்கியப் பங்கு வகித்தீர்கள். அதற்காக இப்போது வருத்தப்படுகிறீர்களா?

கலாம்: இந்தியாவைச் சுற்றியுள்ள பெரிய நாடுகள் எல்லாம் அணு ஆயுதங்களை வைத்துள்ளன. இந்நிலையில், அதிகாரச் சமநிலையை எட்டுவதற்கு நாமும் அணு ஆயுதங்களையும், ஏவுகணைகளையும் வைத்திருப்பது அவசியமாக உள்ளது.

இந்தியா அணு ஆயுதம் தாங்கிய ஏவுகணைகளை முதலில் தாக்குதலுக்குப் பயன்படுத்தாது. பிற நாடுகள் தாக்கினால்தான் அதைப் பயன்படுத்தும்.

கேள்வி: ஏவுகணைத் திட்டங்களுக்கு நாம் ஏராளமான நிதியை செலவிட்டுள்ளோம். அதை வறுமை ஒழிப்புக்காக செலவிட்டிருக்கலாமே?

கலாம்: அக்னி, பிருத்வி உள்ளிட்ட ஏவுகணைத் திட்டங்களில் மிகவும் குறைந்த தொகையைத்தான் இந்தியா செலவிட்டது. அதனால் வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்குச் செலவிடப்பட வேண்டிய நிதியை ஆயுதம் தயாரிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டது என்ற கருத்து தவறானது என்றார்

மேலும் அவர் கூறுகையில், அடுத்த 10 ஆண்டுகளில் தெற்கு ஆசியப் பகுதியில் உள்ள நாடுகள் அனைத்தும் தங்கள் வேறுபாடுகளை மறந்து ஒன்றிணையும் என நம்புகிறேன். ஐரோப்பிய யூனியனைப் போன்று இந்தப் பிராந்தியத்தில் உள்ள நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட வாய்ப்புள்ளது. நூற்றாண்டுகளுக்கும் மேலாக இருந்த விரோதங்களை மறந்து ஐரோப்பிய நாடுகள் இணைந்து செயல்பட முடியும்போது, நம்மால் முடியாதா? என்றார்.

பின்னர் ஊரக மேம்பாட்டுக் கருத்தரங்கில் பேசிய கலாம், இந்தியாவும், வங்கதேசமும் சணல் உற்பத்தியில் உலக அளவில் முதல் இரண்டு இடங்களை வகிக்கின்றன. செயற்கை இழைகளைக் கொண்டு தயாரிக்கும் பிளாஸ்டிக்குகளுக்கு மாற்றாக, இயற்கையாக விளையும் சணலைப் பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க முடியும்.

வங்கதேசத்தின் குல்னா பகுதியில் இத்திட்டத்தை செயல்படுத்த ஏராளமான வசதிகள் உள்ளன என்றார்.

அடுத்த பக்கம் »

Follow

Get every new post delivered to your Inbox.

Join 141 other followers