மேற்கு வங்கத்தை நேற்று தாக்கிய அய்லா புயல் அங்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. 23 பேர் உயிரிழந்துள்ளனர். லட்சத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர். புயல் தற்போது பலவீனமடைந்து விட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தெற்கு 24 பர்கானா மாவட்டத்தில்தான் அதிகபட்சமாக 14 பேர் உயிரிழந்துள்ளனர். கொல்கத்தாவில் ஐந்து பேரும், ஹவுராவில் 3 பேரும், பன்குரா மாவட்டத்தில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
தற்போது கொல்கத்தாவுக்கு மேற்கே 50கிலோமீட்டர் தொலைவில் அய்லா புயல் நிலை கொண்டுள்ளது. அது படிப்படியாக பலவீனமடைந்து வருவதாகவும், மேலும் வலுவடைய வாய்ப்பில்லை எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கொல்கத்தாவில் இன்று காலை முதல் மழை இல்லை. இருப்பினும் காற்று வீசி வருகிறது. கடலோரப் பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புயலால் 2 லட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். 1.10 லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என பிரதமர் மன்மோகன் சிங் நேற்று இரவு அறிவித்தார்.
புயல் பாதித்த பகுதிகளை முதல்வர் புத்ததேவ், ரயில்வே அமைச்சர் மமதா பானர்ஜி ஆகியோர் இன்று பார்வையிடவுள்ளனர்.
புயலால் இறந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ. 2லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்துள்ளார்.