பொ‌றி‌யி‌ய‌ல் படி‌ப்பு‌க்கான கல‌ந்தா‌ய்வு ஜூலை 5ஆ‌ம் தே‌தி தொட‌ங்கு‌கிறது எ‌ன்று தெ‌ரி‌வி‌த்த உய‌ர் க‌ல்‌வி‌த்துறை அமை‌ச்ச‌ர் பொ‌ன்முடி, கடந்த ஆண்டு கட்டணமே இ‌ந்தா‌‌ண்டு வசூலிக்கப்படும் எ‌ன்றா‌ர்.

சென்னை தலைமை செயலக‌த்‌தி‌ல் இன்று செ‌ய்‌தியாள‌ர்களு‌க்கு பே‌ட்டி அ‌ளி‌த்த அவ‌ர், பொறியியல் கல்லூரிகளுக்கான விண்ணப்பங்கள் வருகிற 31ஆ‌ம் தேதிக்குள் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். ரேண்டம் எண் ஜூன் 20ஆ‌ம் தேதி வெளியிடப்படும். தரவரிசை பட்டியல் 25ஆ‌ம் தேதி வெளியாகும்.

பொறியியல் படிப்பில் சேரும் விளையாட்டு வீரர்களுக்கான கலந்தாய்வு ஜூலை 5ஆ‌ம் தேதி நடக்கிறது. தொழிற்கல்வி படித்து பொ‌றி‌யிய‌ல் சேருபவர்களுக்கு 6ஆ‌ம் தேதி முதல் 8ஆ‌ம் தேதி வரையும் தேவைப்பட்டால் தொடர்ந்து நடைபெறும்.

வெளி மாநில மாணவர்களுக்கு 20ஆ‌ம் தேதியும், உடல் ஊனமுற்ற மாணவர்களுக்கு 9ஆ‌ம் தேதியும் கல‌ந்தா‌ய்வு நடக்கிறது.

பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு ஜூலை 10ஆ‌ம் தே‌தி முதல் ஆக‌ஸ்‌ட் 16ஆ‌ம் தே‌தி வரை நடைபெறும். இது கடந்த ஆண்டை விட 15 நாட்கள் குறைவு.

இந்த ஆண்டு கல்வி கட்டணத்தை உயர்த்தக் கூடாது என்று தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கட்டணமே வசூலிக்கப்படும்.

இந்தாண்டு அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அரசு கல்லூரிகளில் 2 ஆயிரத்து 160 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிதாக 5 கல்லூரிகள் தொடங்கப்படுகிறது. இதன் மூலம் கூடுதலாக 1200 மாணவர்களுக்கு இடம் கிடைக்கும்.

கடந்த ஆண்டு அரசு, தனியார் கல்லூரிகளில் 1 லட்சத்து 34 ஆயிரத்து 481 இடங்கள் இருந்தன. இந்த ஆண்டு 1 லட்சத்து 37 ஆயிரத்து 841 இடங்கள் உள்ளன. மருத்துவ பட்டப்படிப்புக்கான கல‌ந்தா‌ய்வு ஜூலை 6ஆ‌ம் தேதி தொடங்குகிறது எ‌ன்று அமைச்சர் பொன்முடி கூறினார்.