currencyநாட்டின் பணவீக்கம் முதன் முறையாக மைனஸ் 1.61 சதவீதமாக குறைந்துள்ளது. இந்தியாவில், கடந்த 30 ஆண்டுகளில், முதன் முறையாக பணவீக்கம் மைனஸ் 1.61 சதவீதம் குறைந்துள்ளது. பண வீக்கம் அதிகரிப்பு என்ற நிலைமாறி “பணவாட்டம் ‘ என்ற பெருமை இந்தியாவிற்கு கிடைத்துள்ளது.

ஐரோப்பிய நாடுகளிலும் பணவீக்கத்தின் சதவீதம் பூஜ்ஜியத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகம் முழுவதிலும் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்குப் பின், இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பணவீக்க விகிதத்தில் மிகப் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. மொத்த விலை குறியீட்டு எண்ணைப் பொறுத்தவரையில் 232.7 புள்ளிகளாக குறைந்துள்ளது.

கடந்த ஆண்டில் இது, 236.5 புள்ளிகளாக இருந்தது. குறைந்த வித்தியாசத்திற்கு இந்த அளவு பணவாட்டம் ஏன் என்ற கேள்வி எழுந்திருக்கிறது. கடந்த ஆண்டு பெட்ரோலியப் பொருட்கள் விலை இருமடங்கு இருந்தது, தற்போது பாதியாகக் குறைந்தது இம்மாற்றத்திற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. இந்தப் பணவாட்டத்தை வரவேற்றுள்ள பொருளாதார நிபுணர்கள், நிதிக் கொள்கையில் இதுவரை கடைபிடிக்கப்பட்டு வந்த கெடுபிடிகள் தளர்த்தப்பட்டு, வங்கி கடன்களுக்கு குறைந்த வட்டி விதிக்கப்படுவதற்கான வாய்ப்புகளும் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

உணவுப்பொருட்களின் விலை குறைந்துள்ளதுஇது குறித்து திட்டக்கமிஷன் துணைத்தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா கூறியதாவது: மொத்த உள்நாட்டு உற்பத்தியைப் பொறுத்தவரையில் வரும் 2009-10ம் ஆண்டில் 7 சதவீதமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், ரிசர்வ் வங்கியின் வருடாந்திர நிதிக் கொள்கையின் படி, உள்நாட்டு மொத்த உற்பத்தி 6 சதவீதம்இருக்கும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. இவ்வாறு மான்டேக் சிங் அலுவாலியா கூறினார்.

“அசோசெம்’ என்ற தொழிலமைப்பு சார்பில் வெளியான அறிக்கையில், “உற்பத்திச் செயல் வேகம் குறைவதின் அறிகுறி பணவாட்டம், தேவை அதிகரிக்காமல் பொருட்கள் விற்பனையாகமல் தேங்கும்’ என்று அச்சம் தெரிவித்திருக்கிறது. ஆனால், நிதித்துறை செயலர் அசோக் சாவ்லா கூறுகையில், ” மைனஸ் பணவீக்கம் என்பது புதிதல்ல, அதே சமயம் இதற்காக அரசின் கொள்கைகளை மாற்ற வேண்டியதில்லை’ என்றார்.