அடுத்த தேர்தலில் இருந்து வெளிநாட்டு வாழ் இந்தியர்களும் இந்தியாவில் நடக்கும் தேர்தல்களில் வாக்களிக்கலாம் என பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுவிட்டது.

இதனால், இந்த மாதம் முதல் மார்ச் வரை உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடக்கும் சட்டமன்றத் தேர்தல்களிலேயே அந்த மாநிலங்களைச் சேர்ந்த வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் வாக்களிக்க முடியும்.

வாக்களிக்க விரும்புவோர் முதலில் இந்திய தேர்தல் ஆணையத்திடம் தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம். இதையடுத்து இவர்களது பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்த வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மாநாட்டில் பேசுகையில் பிரதமர் மன்மோகனன் சிங் இதனைத் தெரிவித்தார்.

கடந்த 2011ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தல்களின்போது ஓமன் நாட்டில் வசிக்கும் சுஜித் தத்தா என்ற ஒரே ஒருவர் மட்டுமே தேர்தல் ஆணையத்திடம் தனது பெயரைப் பதிவு செய்து கொண்டு மேற்கு வங்கத் தேர்தலில் வாக்களித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.