சீனாவின் உரும்சி பகுதியில் உள்ள மசூதிகளை இன்று முழுவதும் திறக்கக் கூடாது என சீன அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதன் காரணமாக அந்த மசூதிகளில் தொழுகை நடத்தப்படுவது தடுக்கப்பட்டுள்ளது.

சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தில் உள்ள உரும்சி நகரில் வசிக்கும் முஸ்லிம் மக்களுக்கும் மற்றொரு பிரிவினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக உருவெடுத்தது. இதில் 156 பேர் பலியானார்கள். இதை தொடர்ந்து அப்பகுதியில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மசூதிகளில் இன்று முஸ்லிம்கள் தொழுகை நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. மக்கள் தங்கள் வீடுகளிலேயே தொழுகை நடத்துமாறு சீன அதிகாரிகளால் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

அப்பகுதியில் தொடர்ந்து அமைதி நிலவவும்,பாதுகாப்பு காரணங்களுக்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், சின்ஜியாங் மாகாணத்தில் உள்ள மற்றொரு நகரமான காஷ்கரில் சுற்றுலாப் பயணிகள் நுழைய தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு காரணத்தைக் காட்டி அந்நகரில் தற்போதுள்ள சுற்றுலாப் பயணிகளையும் வெளியேற சீன அரசு உத்தரவிட்டுள்ளது.