நிலம் புயல் காரணமாக கடலோர மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை விடப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

சென்னைக்கு மிக அருகே தென்பகுதியில் நிலம் புயல் கரையைக் கடக்கும் என்பதால் சென்னை மாநகரம் மிகப்பெரிய பாதிப்பை சந்திக்க கூடும் என்ற அச்சம் நிலவியது. இதனால் புயலின் போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது அவர், தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை, பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்பது குறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

மின்தடை ஏற்பட்டாலும் ஜெனரேட்டர்களை பயன்படுத்தி குடிநீர் விநியோகம் செய்யவும் அவர் உத்தரவிட்டார். புயல் கரையைக் கடந்தாலும் கடலோர மாவட்டங்களில் மழையும், காற்றும் அதிகமாக இருக்கும் என்பதால் நாளை கடலோர மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்.

தேர்வு தேதி மாற்றம்

விடுமுறை காரணமாக நாளை நடைபெறுவதாக இருந்த சென்னை பல்கலைத் தேர்வுகள் மாற்றி வைக்கப்பட்டுள்ளதாக துணை வேந்தர் அறிவித்துள்ளார். நவம்பர் 1ம் தேதி நடைபெவாதாக இருந்த இளங்கலை மற்றும் முதுகலைத் தேர்வுகள் டிசம்பர் மாதம் 10ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.