புதுவை அரசியலில் தனி ஆளுமை செலுத்தி 74-வயதில் உடல் நலக்குறைவால் காலமான ஃபரூக் மரைக்காயரின் உடல் இன்று அடக்கம் செய்யப்படுகிறது.

இந்திய அரசியல் வரலாற்றில் ஃப்ரூக் என்றதும் இரண்டு தலைவர்கள் சட்டென நினைவுக்கு வருவர். ஒருவர் புதுவையின் ஃபரூக் மரைக்காயர். மற்றொருவர் காஷ்மீரத்து ஃப்ரூக் அப்துல்லா.

இப்போது ஃபரூக் மரைக்காயர் காலமாகிவிட்டார். தமது இறுதிக் காலத்தில் கேரள மாநில ஆளுநராக பதவி வகித்தார். உடல்நலக்குறைவுக்காக சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

புதுவையின் காரைக்காலில் 1937 ஆம் ஆண்டு செப்டமர் 6-ந் தேதி பிறந்த மரைக்காயர் தமது மாணவர் பருவத்தில் பிரெஞ்சு பேராதிக்கத்திலிருந்து புதுச்சேரியை விடுவிக்கும் விடுதலைப் போரில் தீவிரப் பங்கேற்றார்.

ஃப்ரூக் மரைக்காயர் 1964 ஆம் ஆண்டு புதுவை சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இளம்வயதிலேயே சட்டப்பேரவை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்ற பெருமைக்குரியவர் ஃப்ரூக் மரைக்காயர்!

மாணவப் பருவத்திலேயே அரசியலுக்கு வந்தவர் பரூக். புதுச்சேரியின் விடுதலைக்கான போராட்டத்தில் ஈடுபட்டார். 1964ம் ஆண்டு முதல் முறையாக எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1991 வரை அவர் தொடர்ந்து எம்.எல்.ஏவாக இருந்து சாதனை படைத்தவர்.

1964 முதல் 67 வரையில் சபாநாயகராகவும், 80 முதல் 85 வரையில் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்துள்ளார்.

3 முறை முதல்வராக இருந்த அவர்,இரண்டு முறை காங்கிரஸ் அரசின் முதல்வராகவும், ஒரு முறை திமுக அமைச்சரவையின் முதல்வராகவும் இருந்தவர்.

1991, 96, 99 ஆகிய ஆண்டுகளில் மக்களவைத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மத்திய அமைச்சராக இருந்தார். புதுச்சேரியில் விமான நிலையம் அமையவும், புதுவையில் பல்கலைக்கழகம் அமையவும் காரணகர்த்தாவாக திகழ்ந்தார்.

2004ம் ஆண்டு சவூதி அரேபியாவுக்கான இந்தியத் தூதராக நியமிக்கப்பட்டார். 2010ம் ஆண்டு ஜார்க்கண்ட் ஆளுநராக பொறுப்பேற்றார்.

2011, ஆகஸ்ட்25ம் தேதி கேரள ஆளுநராகப் பதவியேற்றார். அவருக்கு ஷாஜகான் என்ற மகனும், 2 மகள்களும் உள்ளனர். ஷாஜகான் முன்னாள் புதுவை அமைச்சர் ஆவார்.

புதுவை, கேரளத்தில் விடுமுறை – தலைவர்கள் அஞ்சலி

பரூக் மரைக்காயர் மறைவை அனுசரிக்கும் வகையில் புதுச்சேரி மற்றும் கேரளத்தில் இன்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஃப்ரூக்கிற்கு இறுதி அஞ்சலி செலுத்த கேரள முதல்வர் உம்மண் சாண்டி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் அரசியல் தலைவர்கள் புதுவைக்கு வருகை தந்துள்ளார்.

இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கின் அலுவலகம் டுவிட்டரில் இணைந்துள்ளது. இதன் மூலம் பிரதமர் அலுவலகப் பணிகளை மக்கள் உடனுக்குடன் இணையத்தில் தெரிந்து கொள்ளலாம்.
பத்திரிக்கையாளர் பங்கஜ் பச்சோரி பிரதமர் மன்மோகன் சிங்கின் தகவல் தொடர்பு ஆலோசகராக நியமிக்கப்பட்ட நிலையில் நேற்று பிரதமர் அலுவலகம் டுவிட்டரில் இணைந்துள்ளது. இனி பிரமதர் மன்மோகன் சிங்கின் அலுவலகப் பணிகளை மக்கள் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

வீரதீர செயல்புரிந்தவர்களுக்கு வழங்கப்படும் தேசிய விருது குறித்து தான் பிரதமர் அலுவலகம் டுவிட்டரில் முதன்முதலாக செய்தி வெளியிட்டது.

பிரதமரின் நிகழ்ச்சிகள் டுவிட்டரில் உடனுக்குடன் வெளியிடப்படும்.

http://twitter.com/indian_pm என்ற ட்விட்டர் முகவரியில் பிரதமர் அலுவலக அன்றாட நடவடிக்கைகளை தெரிந்து கொள்ளலாம். தொடங்கப்பட்ட சிலநாட்களுக்குள் இதுவரை 17,266 பேர் பிரதமர் அலுவலக ட்விட்டர் கணக்கைத் தொடர்கிறார்கள்

சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கான அபராதத்தை உயர்த்தி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி அபாயகரமாக வண்டி ஓட்டுபவர்களிடம் இருந்து இரண்டாயிரம் ரூபாய் வரை அபராதமாக வசூலிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது.

சென்னையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதன்படி இரு சக்கர வாகனப் பதிவைப் புதுப்பிக்கத் தவறினால், முதன்முறை பிடிபடும் போது 100 ரூபாயும் அதற்கு அடுத்த ஒவ்வொரு முறையும் 300 ரூபாயும் வசூலிக்கப்படும்.

பதிவு செய்யப்படாத வாகனத்தை ஓட்டினால் முதல் முறை 2 ஆயிரத்து 500 ரூபாய் வசூலிக்கப்படும். இரு சக்கர வாகனத்தில் மூவர் பயணம் செய்தால் 100 ரூபாயும், இரண்டாம் முறை அதே தவறுக்கு 300 ரூபாயும் அபராதம் விதிக்கப்படும். அபாயகரமாக வாகனம் ஓட்டினால் ஆயிரம் ரூபாயும், மீண்டும் அதே தவறு செய்தால் 2 ஆயிரம் ரூபாயும் வசூலிக்கப்படும். அதிவேகமாக வாகனம் ஓட்டினால் 400 ரூபாயும், அடுத்தடுத்த தவறுகளுக்கு 1000 ரூபாயும் அபராதமாக விதிக்கப்படும்.

ஹெல்மெட் அவசியம்

ஹெல்மெட் இன்றி வாகனம் ஓட்டி முதன்முறை பிடிபட்டால் 100 ரூபாயும் அடுத்தடுத்த முறைகளில் 300 ரூபாயும் அபராதமாக வசூலிக்கப்படும். ஓட்டுநர் உரிமம், பதிவுச் சான்றிதழ், இன்சூரன்ஸ் உள்ளிட்ட ஆவணங்களை காட்டத் தவறினால் 100 ரூபாயும், அடுத்தடுத்த முறைகளுக்கு 300 ரூபாயும் விதிக்கப்படும்.

இந்த புதிய உத்தரவு, சென்னை மாநகரில் வரும் 30ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்றும் தமிழக அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இங்கிலாந்தைச் சேர்ந்த பெண் ஒருவர் இருமியபோது அவரது தொண்டையில் இருந்த புற்றுநோய் கட்டி தானாக வெளியே வந்து விழுந்தது. இதனால் அந்தப் பெண் புற்றுநோயிலிருந்து அதிர்ஷ்டவசமாக தப்பியுள்ளார்.

லண்டனைச் சேர்ந்தவர் கிளெய்ர் ஆஸ்பர்ன் (37). அவரது கணவர் கெவின்(53). லாரி டிரைவர். அவர்களுக்கு 6 குழந்தைகள் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிளெய்ர் தனது தொண்டையில் ஏதோ சிக்கியிருப்பது போன்று உணர்ந்தார். இதையடுத்து அவர் மருத்துவரிடம் சென்றார்.

அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவரது தொண்டையில் புற்றுநோய் கட்டி இருப்பதாகவும், அதை அறுவை சிகிச்சை மூலம் அகற்றுவதும் கடினம் என்று தெரிவித்தனர்.

அப்படியே அறுவை சிகிச்சை செய்தாலும் அது வெற்றிகரமாக அமைய 50 சதவீத வாய்ப்பு தான் உள்ளதாக அவர்க்ள் தெரிவித்தனர். இதனால் கவலை அடைந்த கிளெய்ர் இருமியபோது தற்செயலாக அந்த கட்டி வெளியே வந்து விழுந்தது. இதனால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார். இதையடுத்து அவரை பரிசோதித்ததில் அவரது உடலில் புற்றுநோய் செல்கள் பரவவில்லை என்பது தெரிய வந்தது.

இருப்பினும் அவரது வாயில் இருந்த புற்றுநோய் செல்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டன. இதையடுத்து அவர் தற்போது நலமாக உள்ளார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் நீதிமன்றம் அனுப்பி சம்மன்களை வாங்க மறுத்து, ஒளிந்து ஓடிக் கொண்டிருக்கும் இந்தியாவின் பிரபல தொழிலதிபர்களான ரூயா மற்றும் கெய்தான் குடும்பத்தினருக்கான சம்மன்களை, அவர்களது வீடுகளில் நீதிமன்றம் ஒட்ட வைத்துள்ளது.

எஸ்ஸார் தொழில் குழுமத்தின் உரிமையாளர்களான அனுஷ்மன் ரூபா, ரவி ரூயா ஆகியோர் மீதும், லூப் டெலிகாம் நிறுவன அதிபர்களான கிரண் கெய்தான், அவரது கணவர் ஐ.பி.கெய்தான் ஆகியோர் மீது 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிபிஐ வழக்குத் தொடர்ந்துள்ளது. இவர்கள் மீது சமீபத்தில் டெல்லி நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கையும் தாக்கல் செய்தது.

இதையடுத்து, கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் இவர்கள் துபாய்க்குச் சென்றுவிட்டனர். இவர்களை விசாரணைக்கு வரக் கோரி நீதிமன்றம் அனுப்பிய சம்மன்களை, அவர்களது வீடுகள், அலுவலகங்களில் யாரும் வாங்கவில்லை.

இதையடுத்து இந்த சம்மன்கள் அங்கு ஒட்டப்பட்டுள்ளன.

இந் நிலையில் இவர்களது பாஸ்போர்ட்களை ரத்து செய்யக் கோரி நீதிமன்றத்தில் சிபிஐ விரைவில் மனு தாக்கல் செய்யலாம் என்று தெரிகிறது.

2008ம் ஆண்டில் வோடபோன் நிறுவனத்தில் 33 சதவீத பங்குகளை வைத்திருந்த எஸ்ஸார் நிறுவனம், லூப் டெலிகாமிலும் பெரும் பங்குகளை வைத்திருந்தது. ஒரு மண்டலத்தில் 2ஜி லைசென்ஸ் பெறும் தொலைத் தொடர்பு நிறுவனம் இன்னொரு தொலைத் தொடர்பு நிறுவனத்தில் 10 சதவீதத்துக்கு மேல் பங்குகளை வைத்திருக்கக் கூடாது என்பது விதி.

ஆனால், இந்த விதியை மீறி லூப் டெலிகாமின் பெயரைப் பயன்படுத்தி எஸ்ஸார் நிறுவனம் தனக்கு ஒதுக்கப்பட்டதை விட அதிகமான அளவு ஸ்பெக்ட்ரத்தை வாங்கியது. இதையடுத்து இந்த இரு நிறுவனங்களையும் 2ஜி வழக்கில் சிபிஐ சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

மராட்டிய மாநிலத்தின் சதாரா மாவட்டத்திலுள்ள கிராமம் ஒன்றில் ஒரு தலித் விதவைப்பெண் கடுமையாகத் தாக்கப்பட்டு, நிர்வாணமாகவும் நடக்க வைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இரு நாள்களுக்கு முன் தாழ்த்தப்பட்ட வாலிபன் ஒருவன் உயர்சாதிப் பெண்ணுடன் ஓடிப்போன குற்றத்திற்காக பையனின் தாயாரான ரேகா சவாண் என்னும் விதவைப்பெண் இவ்வாறு தாக்கப்பட்டு நிர்வாணமாக நடக்கவிடப்பட்டுள்ளார்

இக்கொடூரச் செயலைச் செய்த கிசான் தத்தாராய் தேசாய் (45), ஹம்பிராவ் பாபுராவ் தேசாய்(39),சாந்தாபாய் கிசன் தேசாய்(35), விமல் தேசாய்(32) சுனிதா தேசாய் (35) ஆகியோர் மீது இந்திய குற்றவியல் சட்டம் 143, 149 (சட்டத்துக்குப் புறம்பாகக் கூடியது), 354 (பெண்ணின் கண்ணியத்துக்கு பங்கம் ஏற்படும் வகையில் தாக்கியது) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

ரேகா சவாண் என்னும் அந்த தாழ்த்தப்பட்ட பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காவல்துறை மேலும் விசாரணை நடத்தி வருகிறது

courtesy :  www.inneram.com

ஆப்கனில் நடந்த தாக்குதலில் அங்கு கொல்லப்பட்ட தலிபான் போராட்டக்காரர்களின் ரத்தம் தோய்ந்த சடலத்தின் மீது, அமெரிக்க ராணுவ வீரர்கள் சிறுநீர் கழித்து மகிழ்ச்சி தெரிவிக்கும் வக்கிரமான வீடியோ காட்சி வெளியாகியிருக்கிறது. இது, உலகத்தின் பல நாடுகளில், குறிப்பாக இஸ்லாமிய நாடுகளில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

தலிபான் போராட்டக்காரர்களை ஒடுக்கும் விதத்தில், 20 ஆயிரம் அமெரிக்க ராணுவ வீரர்கள் ஆப்கானிஸ்தானில் களமிறக்கப்பட்டனர். அவர்கள் காந்தகார் மற்றும் ஹெல்மாண்ட் மாகாண பகுதிகளில் தலிபான்களை வேட்டையாடினர். தற்போது, ஆன்-லைன் வீடியோ காட்சி, அமெரிக்க ராணுவ வீரர்களின் அட்டகாசத்திற்கு, அவர்கள் வக்கிரத்திற்கு ஒரு சாம்பிளாக வெளிவந்திருக்கிறது. அதில், ரத்த வெள்ளத்தில் மிதந்த தலிபான் வீரர்கள் சடலம் மீது, மகிழ்ச்சி களிப்பில் சிறுநீர் கழிப்பது அப்படியே ஒளிபரப்பப்பட்டது.

அதில் ஒரு அமெரிக்க வீரர், “நமக்கு ஆனந்தம் தரும் நாள்’ என்று எக்காளமாகக் கூறுவதும் வெளியாகியிருக்கிறது. இது, உலகெங்கும் உள்ள பலரை முகஞ்சுளிக்க வைத்தது. இஸ்லாமிய நாடுகள் கொதிப்படைந்தன.

ஆப்கன் அதிபர் கர்சாய் கூறுகையில், “இக்காட்சி எங்களுக்கு மன உளைச்சலைத் தந்திருக்கிறது. இறந்தவர்கள் சடலத்தை அவமானப்படுத்தும் இச்செயல் மனிதாபிமானம் அற்றது’ என்றிருக்கிறார். தலிபான் அமைப்பு தகவல் தொடர்பாளர் முஜாகீது கூறுகையில், “இது காட்டுமிராண்டித்தனமானது. கடந்த 10 ஆண்டுகளில் இம்மாதிரி எத்தனையோ சம்பவங்கள் அரங்கேறியுள்ளன’ என்று அதிருப்தி தெரிவித்தார்.

அமெரிக்க அரசும் இச்சம்பவத்தை அறிந்து அதிர்ந்திருக்கிறது. அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் தகவல் தொடர்பாளர் கேப்டன் ஜான் கிர்பி கருத்து தெரிவிக்கையில், “இதை யார் செய்திருந்தாலும் அது மிகத் தவறானது. ராணுவத்தைச் சார்ந்தவர்கள் இம்மாதிரி செயலில் ஈடுபடக்கூடாது.

இவ்விஷயத்தை முழுவதும் விசாரித்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்றார்.

அமெரிக்கா, இஸ்ரேலின் கடும் எதிர்ப்புக்கிடையே ஈரான் அணு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ள நிலையில், அந் நாட்டைச் சேர்ந்த மூத்த அணு விஞ்ஞானி காரில் செல்லும்போது வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டுள்ளார்.

முஸ்தபா அகமதி ரோஷன் என்ற அந்த விஞ்ஞானி ஈரானின் நடான்ஸ் பகுதியில் உள்ள யுரேனிய சுத்திகரிப்பு மையத்தில் பணியாற்றி வந்தார். வாயுக்களை பிரித்தெடுப்பதில் வல்லுனரான இவர் இன்று காலை தெஹ்ரான் அல்லாமே தபதி பல்கலைக்கழகம் அருகே காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கேஸ் குண்டை கார் மீது ஒட்டிவிட்டு வெடிக்கச் செய்தனர். அந்த குண்டு வெடித்ததில் முஸ்தபா அந்த இடத்திலேயே பலியானார். காரில் இருந்த மேலும் இருவர் காயமடைந்தனர்.

தனது அணு உலைகள், அணு ஆயுதங்களுக்கான யுரேனியத்தை வாயுக்களைப் பிரித்தெடுக்கும் தொழில்நுட்பம் மூலம் சுத்திகரித்து வருகிறது ஈரான். இந்தத் தொழில்நுட்பத்துக்குத் தேவைப்படும் பாலிமெரிக் மெம்பரேன்ஸ் தயாரிப்பில் ஈடுபட்டு வந்தார் முஸ்தபா என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பும் ஈரானின் இரு அணு விஞ்ஞானிகள் இதே போன்ற கேஸ் வெடிகுண்டு தாக்குதல் மூலம் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஈரானின் அணு ஆராய்ச்சி மையத்தின் இப்போதைய தலைவரான பிரேயதோன் அப்பாசி, இதே போன்ற குண்டுவீச்சுத் தாக்குதலில் இருந்து கடந்த 2010ம் ஆண்டு நவம்பரில் உயிர் தப்பியதும் குறிப்பிடத்தக்கது.

இந்தத் தாக்குதல்களை இஸ்ரேலிய உளவு அமைப்பான மொஸாத் மற்றும் அமெரிக்க உளவுப் பிரிவான சிஐஏ தான் நடத்தியுள்ள ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.

அணு ஆராய்ச்சிகளை நிறுத்தாவிட்டால், ஈரானின் அணு ஆராய்ச்சி மையங்கள் மீது போர் விமானங்கள் மூலம் குண்டுவீசுவோம் என இஸ்ரேல் எச்சரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. ஆனால், அணு உலைகளுக்குத் தேவையான எரிபொருளுக்காகவே யுரேனியத்தை சுத்திகரித்து வருவதாகவும், ஆயுதம் ஏதும் தயாரிக்கவில்லை என்றும் ஈரான் கூறி வருகிறது.

அமெரிக்கா, இஸ்ரேல் விமானத் தாக்குதலில் இருந்து தனது அணு ஆராய்ச்சி மையங்களைக் காக்க, அவற்றை பெர்டோவில் உள்ள மலைகளைக் குடைந்து அதற்கு அடியில் அமைத்துவிட்டது ஈரான்.

உலகின் பல பகுதிகளிலும் நிலவும் அரசியல் சூழல், பதற்றம், மந்த நிலை ஆகியன காரணமாக கச்சாஎண்ணெய் விலை மிகவும் இறங்கியுள்ளது. தற்போது பேரல் ஒன்றுக்கு $101.70 என்ற அளவில் இவ்விலை உள்ளது. இதற்கு முந்தைய விலையைக் காட்டிலும் இது 5% வீழ்ச்சியாகும்.

அமெரிக்கச் சந்தைகளில் ஏற்பட்டுள்ள மந்தநிலை, ஈரானின் மிரட்டல், நைஜிரிய
சூழல் ஆகியவை இதற்குக் காரணங்களாகச் சொல்லப்படுகின்றன

நியூயார்க் நகரின் அடுத்த மாத முன்பதிவு விற்பனைக் கணக்கின்படி கச்சா எண்ணெய் விலை 5.4 சதவீதம் சரிந்து ஒரு பேரலுக்கு 101.70 அமெரிக்க டாலர்களாக உள்ளது என்று செய்திகள் வந்துள்ளன.

அடுத்த தேர்தலில் இருந்து வெளிநாட்டு வாழ் இந்தியர்களும் இந்தியாவில் நடக்கும் தேர்தல்களில் வாக்களிக்கலாம் என பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுவிட்டது.

இதனால், இந்த மாதம் முதல் மார்ச் வரை உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடக்கும் சட்டமன்றத் தேர்தல்களிலேயே அந்த மாநிலங்களைச் சேர்ந்த வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் வாக்களிக்க முடியும்.

வாக்களிக்க விரும்புவோர் முதலில் இந்திய தேர்தல் ஆணையத்திடம் தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம். இதையடுத்து இவர்களது பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்த வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மாநாட்டில் பேசுகையில் பிரதமர் மன்மோகனன் சிங் இதனைத் தெரிவித்தார்.

கடந்த 2011ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தல்களின்போது ஓமன் நாட்டில் வசிக்கும் சுஜித் தத்தா என்ற ஒரே ஒருவர் மட்டுமே தேர்தல் ஆணையத்திடம் தனது பெயரைப் பதிவு செய்து கொண்டு மேற்கு வங்கத் தேர்தலில் வாக்களித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த பக்கம் »

Follow

Get every new post delivered to your Inbox.

Join 60 other followers